கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்கிறது


கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்கிறது
x
தினத்தந்தி 19 July 2017 3:30 AM IST (Updated: 19 July 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சிறையில் கைதிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

சிறை முறைகேடு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகளை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அம்பலப்படுத்தினார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ரூபாவிடம் சில கைதிகள் புகார் மூலம் முக்கிய தகவல்களை கொடுத்ததை தொடர்ந்து, அவர் சிறையில் சோதனை நடத்தி அங்கு நடைபெறும் முறைகேடுகளை கண்டுப்பிடித்ததாக தெரிகிறது.

கடந்த 15–ந் தேதி அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆகியோர் அடுத்தடுத்து பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ரூபாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் சிறையின் உள்ளே கைதிகள் 2 கும்பலாக பிரிந்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

32 கைதிகள் சிறை மாற்றம்

இதன் தொடர்ச்சியாக, அதிகாரி ரூபாவிற்கு சிறை பற்றிய தகவல்களை கொடுத்தது யார்–யார்? என்று சிறை காவலர்கள் அன்று இரவே விசாரணை நடத்தினர். அப்போது தகவல் கொடுத்ததாக சந்தேகப்பட்ட கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அன்று இரவோடு இரவாக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த 32 கைதிகள் பல்லாரி, பெலகாவியில் உள்ள இண்டல்கா உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

இப்படி மாற்றப்பட்ட கைதிகள் அனந்தமூர்த்தி, பாபு மற்றும் ‘லாங்கு’ பாபு ஆகிய 3 பேர் பெலகாவி இண்டல்கா சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 3 பேரும் இண்டல்கா சிறை வளாகத்தில் போலீஸ் வாகனத்தில் வந்து இறங்கியபோது பாபு, ‘லாங்கு’பாபு ஆகியோர் நொண்டி, நொண்டி சிறைக்குள் நடந்து சென்றனர். அனந்தமூர்த்தியால் நடக்க முடியவில்லை. இதனால், அவரை போலீஸ்காரர்கள் கைத்தாங்கலாக பிடித்து சிறைக்குள் அழைத்து சென்றனர்.

மனித உரிமை ஆணையம் அறிக்கை

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகின. அத்துடன், சிறை மாற்றத்துக்கு முன்பு கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், ‘சிறை மாற்றத்துக்கு முன்பு பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்த கைதிகள் தாக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்‘ என மனோகர் ரங்கநாதன் என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசின் கூடுதல் தலைமை செயலாளரிடம், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவி மீரா சக்சேனா அறிவுறுத்தி உள்ளார்.


Next Story