பெங்களூரு சிறையில் சாதாரண அறைக்கு சசிகலா மாற்றம் பிற கைதிகளுக்கான உணவே வழங்கப்பட்டதாக தகவல்
பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அவர் சிறையில் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, அவர் சிறையில் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பிற கைதிகளுக்கான உணவே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள்பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.(அம்மா) அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த முறைகேடுகள் தொடர்பாக ரூபா 2 அறிக்கைகளையும் தாக்கல் செய்திருக்கிறார்.
அவரது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதற்கான வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதாவது சசிகலா தூங்குவதற்காக ஒரு அறை, பார்வையாளர்களை சந்தித்து பேசுவதற்கு ஒரு அறை, தனி சமையல் அறை, சசிகலாவின் பொருட்கள் வைக்க தனி அறை, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சி செய்ய தனியாக அறை என மொத்தம் 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதற்கான வீடியோ காட்சிகள் வெளியாகின.
சாதாரண அறைக்கு மாற்றம்அது மட்டுமின்றி சசிகலாவுக்கு சிறையில் ஒதுக்கப்பட்டுள்ள அறை, ஓட்டலில் இருக்கும் வசதிகளுடன் இருப்பது போன்ற காட்சிகளும், மேலும் பெண் கைதிகள் அணியும் உடையை சசிகலா அணியாமல் நைட்டி அணிந்து கொண்டு வலம்வரும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளன. சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது, சிறப்பு வசதிகள் உள்ள அறையில் அவர் தங்கி இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானாலும், அந்த காட்சிகளில் உள்ளது சசிகலாவின் அறைதானா? என்பதை சிறைத்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும் இதுபோன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பதாலும், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளதாலும், அதே நேரத்தில் இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு எப்போது வேண்டுமானாலும், அங்கு சென்று ஆய்வு நடத்த இருப்பதாலும், சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து, சிறையில் உள்ள சாதாரண அறைக்கு சசிகலா மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் தயாரிக்கப்படும் உணவுகள்அதாவது சிறையில் பிற கைதிகளுக்கு வழங்கப்படும் சாதாரண அறையே சசிகலாவுக்கும் நேற்று முன்தினத்தில் இருந்து வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அறை சிறையின் நிர்வாக அலுவலகத்தையொட்டி அமைந்திருப்பதாக தெரிகிறது. அந்த அறையில் எந்த விதமான சிறப்பு வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் தயாரித்து மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளே சசிகலாவுக்கும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அதன்படி, காலையில் எலுமிச்சை சாதம், மதியம் தயிர் சாதம் மற்றும் ராகி ரொட்டியும், இரவில் சப்பாத்தியும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் வழக்கமாக காலையில் இட்லி அல்லது தோசையும், மதிய சாப்பாட்டுக்காக சசிகலாவுக்கு அசைவ உணவு உள்ளிட்ட விரும்பிய உணவை சமைத்து சாப்பிட்டு வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்று முன்தினம் அவர் கேட்டுக் கொண்டதால் மதிய சாப்பாட்டுக்கு தயிர் சாதமும், ராகி ரொட்டியும் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சசிகலா நேற்று முன்தினம் சிறை அறையில் இருந்து வெளியே வரவில்லை என்றும், இளவரசியை மட்டும் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.