பயிர்கள் காய்ந்ததால் விவசாயி தற்கொலை: 5 பெண் குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனைவி உதவி கேட்டு மனு
பயிர்கள் காய்ந்ததால் தீக்குளித்து இறந்த விவசாயியின் மனைவி 5 பெண் குழந்தைகளுடன் வந்து உதவி தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
திருச்சி,
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை பக்கம் உள்ள கொய்யா தோப்பு என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் தனது நிலத்தில் சாகுபடி செய்திருந்த சோளம் மற்றும் கத்தரி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போனதால் மனம் உடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீக்குளித்து இறந்த கணேசனுக்கு சீத்தாலட்சுமி (வயது30) என்ற மனைவியும், 5 பெண் குழந்தைகளும், மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
கணவனை இழந்த சீத்தாலட்சுமி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது ஐந்து பெண் குழந்தைகளுடன், ஆண் குழந்தையையும் தூக்கி கொண்டு வந்தார். தனது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தனக்கு உதவி தொகை வழங்கும்படி கேட்டு கலெக்டரின் உதவியாளரிடம் மனு கொடுத்தார். அவர்களுடன் வந்திருந்த கணேசனின் தந்தை அண்ணாவி நிருபர்களிடம் கூறுகையில் ‘எனது மகன் 3½ ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தான். எங்கள் நிலத்தில் ஏற்கனவே வெட்டி இருந்த கிணற்றில் நீர் வற்றி விட்டது. புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றிலும் தண்ணீர் இல்லை. வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் காய்ந்து போனதால் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டான்’ என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன் இது தொடர்பாக கூறுகையில் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கணேசனின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.30 லட்சம் நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் சிபாரிசு செய்யவேண்டும் என்றார்.