தென்மாவட்டங்களுக்கு ரெயில் இயக்க கோரி மாட்டு வண்டிகளுடன் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில்பாதை வழியாக தென் மாவட்டங்களுக்கு ரெயில்களை இயக்க கோரி, மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
போத்தனூர்
கோவையில் இருந்து போத்தனூர்–பொள்ளாச்சி வழியாக மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மீட்டர் கேஜ் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிக்காக 2004–ம் ஆண்டு ரூ.350 கோடி செலவில் பணிகள் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இந்த பாதையில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பணிகள் முடிவடைந்து கடந்த 15–ந்தேதி போத்தனூரில் இருந்து பொள்ளாச்சிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. ஆனால் இந்த வழித்தடத்தில் முன்பு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்குவது பற்றி ரெயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.ஏனென்றால் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மற்றும் தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல இந்த ரெயில்களைத்தான் நம்பி இருந்தனர். அகல ரெயில் பாதையில் ரெயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.இந்த வழித்தடத்தின் நிர்வாகம் பாலக்காடு கோட்டத்தில் உள்ளது. எனவே முன்பு போல ரெயில்கள் இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுவதாக விவசாயிகளும் பொது மக்களும் தெரிவித்து உள்ளனர்.
இதைதொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் இயக்க வேண்டும் என்று வற்புறுத்தி தண்டவாளத்தில் மாட்டு வண்டிகளை இயக்கி நூதன போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.
நேற்று காலை முதல் போத்தனூர் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் ஏராளமானவர்கள் மாட்டு வண்டிகளுடன் போத்தனூர் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டனர். தண்டவாளத்தில் மாட்டு வண்டிகளை ஓட்டப்போவதாக விவசாயிகள் கூறி கோஷமிட்டனர். அவர்களை ரெயில்நிலைய வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் போலீசாரின் கோரிக்கைகளை ஏற்று மாட்டு வண்டிகளை ரெயில்நிலையம் முன்பு நிறுத்திவிட்டு நிர்வாகிகள் சிலர் மட்டும் ரெயில்நிலைய அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி, ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் துரை குமாரவேல், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த வேலு, சிட்டிசன் வாய்ஸ் கிளப்பை சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:–
கோவையில் இருந்து மதுரை, ராமேசுவரம் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு மீட்டர் கேஜ் ரெயில்பாதையில் முன்பு ரெயில்கள் இயக்கப்பட்டபோது விவசாயிகள், சுற்றுலா பயணிகள் என்று பலதரப்பு மக்களும் பயன்அடைந்து வந்தனர்.
தற்போது அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் ஏற்கனவே தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரெயில்களை இயக்குவது குறித்து ரெயில்வே நிர்வாகம் எந்த தகவலும் அறிவிக்கவில்லை. தற்போது கோவை–பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வரும் மதிய நேர ரெயிலினால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. எனவே காலை, மாலை நேரங்களில் கோவை–பொள்ளாச்சி இடையே ரெயில்களை இயக்க வேண்டும்.
செட்டிபாளையம் அருகே ரெயில்பாதையையொட்டி சிறிது தூரத்திலேயே கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. பாறைகள் உடைக்கப்படும்போது பாறைகள் ரெயில்பாதையில் உருண்டு விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. ரெயில்பாதை அமைக்கும்போது விதிகள் மீறப்பட்டு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் மாட்டுவண்டிகளை ஓட்டி போராடம் நடத்த வந்தோம்.எங்களது மனு மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை ரெயில்வே நிர்வாகம் சந்திக்க வேண்டி இருக்கும்.
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர், மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.