நடிகர் கமல் குறித்து தமிழக அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர்
நடிகர் கமல் குறித்து தமிழக அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,
ராமேசுவரம் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக மத்திய அரசின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 27–ந்தேதி திறந்து வைக்கிறார். அப்போது அவர் மதுரை வழியாக ராமேசுவரம் செல்கிறார். பிரதமரின் வருகை குறித்து உயரதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுத்துறைகளின் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக நிருபர்களிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அப்துல்கலாம் மணிமண்டபம் மக்களால் வழிபடக்கூடிய தலமாக அமையும். துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கும். அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசித்துள்ளார். தமிழக மக்களின் கலாசாரம் குறித்து அவருக்கு நன்கு தெரியும். அனைத்து தரப்பு மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அவர் நன்கு அறிந்தவர்.
பரப்பன அக்ரஹார சிறையில் விதிகள் மீறப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கர்நாடக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். டி.ஐ.ஜி. ரூபாவின் பணியிட மாற்றம் நிர்வாக ரீதியிலானது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே அது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு உரிய முறையில் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். ஆனால் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். வன்கொடுமை சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் அமைச்சர்கள் பேசி வருவதே வன்கொடுமைதான். அரசியலுக்கு வந்தால்தான் ஆட்சி குறித்து கருத்துக்கூற வேண்டும் என்ற அவசியமில்லை. தேவையில்லாமல் தமிழக அமைச்சர்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.