3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2017 3:11 AM IST (Updated: 19 July 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், 8-வது ஊதிய குழுவை அமல்படுத்த வேண்டும், அதற்கு முன்பாக 1.1.2016 முன் தேதியிட்டு 20 சதவீத ஊதியத்தை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்களின் ஜாக்டோ அமைப்பு மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் குமரி மாவட்ட கிளை சார்பில், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் பெனின் தேவகுமார் தலைமை தாங்கி பேசினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குமரி மாவட்ட செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க குமரி மாவட்ட தலைவர் பகவதியாபிள்ளை அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் வேலவன் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். பொதுசுகாதார அலுவலக சங்க மாநில தலைவர் கங்காதரன் நிறைவுரையாற்றினார். போராட்டத்தின் முடிவில், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

போக்குவரத்து நெரிசல்

இந்த போராட்டத்தில், அனைத்து அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் காரணமாக, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story