நோயாளிகள் இல்லாமல் அதிவேகமாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வேன்கள்


நோயாளிகள் இல்லாமல் அதிவேகமாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வேன்கள்
x
தினத்தந்தி 19 July 2017 5:30 AM IST (Updated: 19 July 2017 2:00 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே நோயாளிகள் இல்லாமல் அதிவேகமாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ் வேன்களை ஓட்டிச்சென்ற டிரைவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

கரூர்

கரூர் அருகே ராயனூர் நால் ரோட்டில் 2 தனியார் ஆம்புலன்ஸ் வேன்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிவேகமாக சென்றன. மேலும் சைரன் ஒலிக்கப்பட்டு வந்தது. இதனால் அந்த பகுதியில் விபத்து ஏதேனும் நடந்ததோ? என அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வேன்கள் வேகமாக வருவதை அங்கிருந்த பசுபதிபாளையம் போலீசார் கண்டனர். அப்போது வேன்களின் உள்ளே நோயாளிகள் யாரும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 ஆம்புலன்ஸ் வேன்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை ஓட்டி வந்த 2 டிரைவர்களையும் பிடித்து விசாரித்தனர். அப்போது விபத்து நடந்ததாகவும், அதற்காக ஆம்புலன்ஸ் வேன்களை ஓட்டி செல்வதாகவும் முன்னுக்கு பின் முரணாக கூறினர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ் வேன்கள் செல்லவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், டிரைவர்களில் ஒருவர் கரூர் முத்துராஜாபுரத்தை சேர்ந்த சுதன் (வயது 24) என்பதும், மற்றொரு டிரைவர் திருமாநிலையூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(21) என்பதும், அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து சுதன், ராஜ்குமார் ஆகிய 2 பேருக்கும் தலா ரூ.1,500 அபராதம் விதித்து போலீசார் வசூலித்தனர். ஆம்புலன்ஸ் வேன்கள் சைரன் ஒலித்தப்படி ஒன்றன்பின் ஒன்றாக அதிவேகமாக சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story