தாமிரபரணி ஆற்றுப்பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் மனோஜ் பாண்டியன் கோரிக்கை


தாமிரபரணி ஆற்றுப்பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும்  மனோஜ் பாண்டியன் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2017 2:30 AM IST (Updated: 20 July 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றுப்பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை,

தாமிரபரணி ஆற்றுப்பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

93 ஆயிரம் ஏக்கர் பாசனம்

பாபநாசம், காரையாறு அணைகளின் ஆற்றுப் பாசனத்தில் மொத்தம் 93 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த அணைகளில் இருந்து விவசாயத்துக்காக ஜூன் 1–ந் தேதி கன்னடியன் கால்வாய், வடக்கு கோடை மேல் அழகியான் கால்வாய், தெற்கு கோடை மேல்அழகியான் கால்வாய், கோடகன் கால்வாய், நதியுன்னி கால்வாய், பாளையங் கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கும் காலங்களில் கூட, மேற்கண்ட பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கடந்த 1977–ம் ஆண்டு முதல் 1991–ம் ஆண்டு வரை பி.எச்.பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்திலும், அதன்பின்னர் 2001–ம் ஆண்டு முதல் 2006–ம் ஆண்டு வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்திலும் முன்குறுவை சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1–ந் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோல் பலமுறை அணையின் நீர்மட்டம் 50 அடி மற்றும் அதற்கு கீழ் இருந்தபோதும் மேற்கண்ட பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்க வேண்டும்

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 52 அடியாக உள்ளது. மேலும் கடுமையான வறட்சி காரணமாக பிசான சாகுபடி செய்யாமல் விவசாயிகள் கடனில் உள்ளனர். ஏற்கனவே பயிரிடப்பட்ட பல லட்சம் வாழைகள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளன. எனவே விவசாயிகளின் நலன் கருதி முந்தைய மாவட்ட கலெக்டர்கள் கடைபிடித்த நடைமுறையை பின்பற்றி தற்போதைய மாவட்ட கலெக்டரும் பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story