சுரண்டை அருகே வேன் மோதி, பிளஸ்–1 மாணவர் பலி மற்றொரு மாணவரும் படுகாயம்
சுரண்டை அருகே வேன் மோதி, பிளஸ்–1 மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
சுரண்டை,
சுரண்டை அருகே வேன் மோதி, பிளஸ்–1 மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தார்.
பிளஸ்–1 மாணவர்கள்நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பூப்பாண்டியாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த காட்டுராஜா மகன் மாரீசுவரன் (வயது 16). அதே ஊர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் மதன் (16). நண்பர்களான இவர்கள் இருவரும், சுரண்டை அருகே சிவகுருநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை அவர்கள் இருவரும் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு, வீடு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். சேர்ந்தமரம் ரோட்டில் வந்தபோது, அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
பலிஇந்த விபத்தில் மாரீசுவரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதன் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த மதனை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மதன் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவர் மதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். மாரீசுவரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் மாரீசுவரன் பலியான தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.
டிரைவரிடம் விசாரணைஇந்த விபத்து தொடர்பாக சுரண்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்தார். வேன் டிரைவர் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த பழனி மகன் செந்துரைபாண்டியன் (23) என்பவரிடம், இன்ஸ்பெக்டர் பெருமாள் விசாரணை நடத்தி வருகிறார்.