குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 July 2017 3:30 AM IST (Updated: 20 July 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியன் சம்பூருணி கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொண்டி,

திருவாடானை யூனியன் மங்கலக்குடி அருகே உள்ள சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மங்கலக்குடி–அஞ்சுகோட்டை சாலை புதிதாக அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சாலை மேம்பாடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சாலையின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருந்த கூட்டுக் குடிநீர் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் அதிக அளவில் சேதமடைந்தன.

இதனால் சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் முற்றிலுமாக தடைபட்டது. இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து பல நாட்களாகியும் இப்பகுதிக்கு செல்லும் சேதமடைந்த குடிநீர் குழாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து சேதப்படுத்தப்பட்ட குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சேதமடைந்த குடிநீர் குழாய்கள் சரிசெய்யப்பட்டன.

ஆனால் மங்கலக்குடி நீரேற்று நிலையத்தில் இருந்து இப்பகுதிக்கு குடிநீர் திறக்க அங்குள்ள அலுவலர் மறுத்து விட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் சுமார் 100–க்கும் மேற்பட்டோர் தாலுகா விவசாயிகள் சங்க செயலாளர் சேதுராமு தலைமையில் நேற்று காலி குடங்களுடன் மங்கலக்குடி நான்கு முனை சந்திப்பில் தேவகோட்டை–ஓரியூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டல அலுவலர் கணேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைராஜ், திருவாடானை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சம்பூருணி ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story