மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: கோவை குற்றால அருவியில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: கோவை குற்றால அருவியில் 2–வது நாளாக வெள்ளப்பெருக்கு தடைவிதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
கோவை,
கோவையில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை குற்றால அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த அருவி இருப்பதாலும், ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவதாலும், இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கிறார்கள்.
இந்த அருவி வனப்பகுதிக்குள் இருப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சாடிவயல் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். பின்னர் அங்கிருந்து வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். இதற்காக பெரியவர்களுக்கு ரூ.50–ம், சிறியவர்களுக்கு ரூ.30–ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் அருவியில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரே கொட்டியது. எனினும் அந்த தண்ணீரில் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், கடந்த மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. 3 நாட்களுக்கு பின்னர் தண்ணீர் குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் அங்கு தண்ணீர் மிகக்குறைவாகவே வந்து கொண்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடம் தெரியாத அளவுக்கு அருவியில் தண்ணீர் பாய்ந்து சென்றது. இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை 11 மணியில் இருந்து அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், அருவியில் தண்ணீர் குறையவில்லை. அதிகரித்தபடிதான் இருக்கிறது. நேற்றும் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 2–வது நாளாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து அருவியிலும், அருவிக்கு செல்லும் வழியிலும் கனமழை கொட்டி வருகிறது.
இந்த மழை காரணமாக அருவிக்கு செல்லும் வழியில் உள்ள சீங்கப்பதி அருகே உள்ள குஞ்சராடி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அடர்ந்த வனப்பகுதிக்குள் இந்த அருவி இருப்பதாலும், அருவியின் அடிவாரத்தில் எப்போதுமே யானைகள் கூட்டம் இருப்பதாலும் இங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி கிடையாது.
கடந்த 2 வருடங்களாக இந்த அருவியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக குஞ்சராடி அருவியிலும் வெள்ளியை உருக்கியதுபோன்று தண்ணீர் கொட்டுவதால், சீங்கப்பதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் அதை பார்த்து மகிழ்ந்தனர்.
கோவை குற்றால அருவி, குஞ்சராடி அருவி ஆகிய அருவிகளில் வழிந்தோடும் தண்ணீர் மற்றும் மழை காரணமாக மலையில் இருந்து வரும் தண்ணீர் அனைத்தும் நொய்யல் ஆற்றில் கலந்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைசாவடி தடுப்பணையில் இருந்து குளங்களுக்கு செல்லும் வகையில் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் கோவை அருகே உள்ள வேடபட்டியில் இருக்கும் கோளராம்பதி, புதுக்குளம், நரசாம் பதி ஆகிய 3 குளங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதே அளவில் தண்ணீர் சென்றால் ஒரு வாரத்துக்குள் அந்த 3 குளங்களுமே நிரம்ப வாய்ப்பு உள்ளது.
பலத்த மழை காரணமாக பல்வேறு ஓடைகள் வழியாக மத்வராயபுரத்தில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்து கலக்குகிறது. தொடர்ந்து ஆற்றுக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டு இருப்பதால், தண்ணீர் திறக்கப்பட்ட நிலையிலும் சித்திரை சாவடி தடுப்பணை நிரம்பி வழிந்தது.
தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் நொய்யல் ஆற்றில் ஓடுகிறது. இதனால் எந்த நேரத்திலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால், கரையோர பகுதியில் இருக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவோ, துணிகளை துவைக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
சிறுவாணி அடிவாரத்தில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் புதுவெள்ளம் பொங்கு நுரையுடன் பாய்ந்து செல்கிறது. பெரும் இரைச்சலுடன் மரக்கிளை களை அடித்தபடி தண்ணீர் கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், தண்ணீரின் அளவு அதிகரிக்கதான் வாய்ப்பு உள்ளது. குறைய வாய்ப்பு இல்லை. அருவிக்கு வரும் தண்ணீரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அருவிக்கு செல்லும் வழியில் உள்ள சாடிவயல் வனத்துறை சோதனை சாவடியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கு செல்ல தடை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். சுற்றுலா பயணிகளில் சிலர், சாடிவயல் சோதனை சாவடி அருகே உள்ள சின்னாற்றில் ஓடும் தண்ணீரை பார்த்து மகிழ்ந்து, புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.