சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு தொடர்பு


சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு தொடர்பு
x
தினத்தந்தி 20 July 2017 2:45 AM IST (Updated: 20 July 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி குற்றம்சாட்டி உள்ளது.

பெங்களூரு,

சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட விவகாரத்தில் கர்நாடக முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வருக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி குற்றம்சாட்டி உள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்றுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். மேலும் அவர், இந்த லஞ்ச தொகையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் பெற்றுள்ளதாக கூறி அவருக்கே அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். புகாரை டி.ஜி.பி. மறுத்தார். சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் இடையேயான இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை அடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சத்தியநாராயணராவ், டி.ஐ.ஜி. ரூபா ஆகியோர் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள சொகுசு வசதிகள் குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மாநில அரசுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

பரமேஸ்வருக்கும் தொடர்பு

இந்த முறைகேடுகளில் போலீஸ் மந்திரியாக இருந்து சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தவரும், கர்நாடக காங்கிரஸ் தலைவருமான பரமேஸ்வருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பரமேஸ்வருக்கு நெருக்கமான கர்நாடக மாநில அ.தி.மு.க.(அம்மா) அணியை சேர்ந்த ஒருவர் மூலம் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) அணி நிர்வாகி அன்புக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது:–

அனைத்து வசதிகளையும்...

மன்னார்குடி குடும்பம்(சசிகலா குடும்பத்தினர்) பரப்பனஅக்ரஹாரா சிறை அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு வீடு வாங்கியுள்ளது. இரவு நேரங்களில் சிறையில் இருந்து சசிகலா விடுவிக்கப்பட்டு அந்த வீட்டில் வந்து தங்கி இருந்து அனைத்து வசதிகளையும் அனுபவித்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி, ஒரு விரிவான விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுப்பேன். கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளது.

இவ்வாறு அன்புக்குமார் கூறினார்.

குற்றச்சாட்டு தவறானவை

தன் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை முன்னாள் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் முழுமையாக நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பரப்பனஅக்ரஹாரா சிறை விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. நான் மந்திரியாக பணியாற்றியபோது எனது அலுவலகம் சிறை அதிகாரிகளுக்கு இது தொடர்பாக ஏதாவது உத்தரவு பிறப்பித்ததா? என்பது குறித்து விசாரிக்கட்டும். சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு நான் ஏதாவது உத்தரவிட்டேனா? என்பது குறித்தும் விசாரணை அதிகாரி விசாரணை நடத்தட்டும். ஏதாவது தவறுகள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை குழு கண்டுபிடிக்கட்டும். அவ்வாறு ஏதாவது தவறு நடந்திருந்தால் வெளியே கொண்டுவரட்டும்“ என்றார்.


Next Story