கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை சித்தராமையா பேச்சு


கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 20 July 2017 2:30 AM IST (Updated: 20 July 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை என்று சித்தராமையா கூறினார்.

கன்னட காவல் குழு

கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 59 கன்னடர்களுக்கு பாராட்டு விழா பெங்களூரு காந்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அவர்களை கவுரவித்து பேசியதாவது:–

கன்னடர்களிடம் மொழி பற்று குறைவாக உள்ளது என்பதற்காகவே கன்னட காவல் குழு அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் கட்டாயம் கன்னடம் கற்க வேண்டும். முன்பு ஒரு முறை ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், கன்னடம் கற்க முடியாது என்று கூறினார். உங்கள் சேவை போதும் என்று கூறி அவரை மத்திய அரசின் பணிக்கு அனுப்பி விட்டோம்.

கர்நாடகத்தில் இடம் இல்லை

கர்நாடகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கன்னடத்தை கட்டாயம் கற்க வேண்டும். கன்னடம் கற்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கர்நாடகத்தில் இடம் இல்லை. ஆட்சி நிர்வாகத்தில் கன்னடத்தை அமல்படுத்தும் நோக்கத்தில் கன்னட வளர்ச்சி ஆணையம் பணியாற்றி வருகிறது. இதை அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகத்தை சேர்ந்த 59 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு சேவையாற்ற செல்ல உள்ளீர்கள்.

இதில் பின்தங்கிய மாவட்டமான கோலாரில் இருந்து வந்த நந்தினி, நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்து, கர்நாடகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கண்பார்வை இல்லாதவர் ஒருவரும் இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நீங்கள் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அங்குள்ள உள்ளூர் மொழியை கற்று சிறப்பான முறையில் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அத்துடன் கர்நாடகம், கன்னட மொழி மீது எப்போதும் பற்று வைத்துக்கொள்ள வேண்டும்.

கர்நாடக சேவைக்கு வர வேண்டும்

நீங்கள் கர்நாடகத்திற்கு சேவையாற்ற வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ள நந்தினி கர்நாடக சேவைக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் பேசிய கன்னடம் மற்றும் கலாசாரத்துறை மந்திரி உமாஸ்ரீ, “ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சட்டத்தின்படி நடப்பதை காட்டிலும் மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும் கர்நாடக மாநிலம், மொழி மீது பற்று வைத்திருக்க வேண்டும். நீங்கள் செல்லும் மாநிலங்களில் சிறப்பான சேவை புரிய வேண்டும். எங்கு சென்றாலும் சொந்த மண்ணை மறக்க வேண்டாம். ஊழலை தடுத்து ஏழை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்“ என்றார்.

இந்த விழாவில் தலைமைச் செயலாளர் சுபாஷ்சந்திர குந்தியா, கன்னட வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story