தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் நல்லாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் நல்லாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 July 2017 3:30 AM IST (Updated: 20 July 2017 2:33 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் வினியோகம் செய்யப்படாததால் நல்லாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.

பெருந்துறை

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு ஆழ்குழாய் தண்ணீர் மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி, குழாய் மூலமாக வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியதால், டிராக்டர்களில் டேங்கர்கள் பொருத்தி அதில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 3 நாட்களாக நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9, 10, 11 ஆகிய 3 வார்டு பொதுமக்களுக்கு டிராக்டர் தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வார்டு பொதுமக்கள் நேற்று பகல் 11 மணி அளவில் நல்லாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் சென்று முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் நல்லாம்பட்டி பேரூராட்சி செயல்அதிகாரி டாரத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘பூங்கா அருகே உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து 9, 10, 11 வார்டு பகுதிக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படும்’ என்று உறுதி அளித்தார். அதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றார்கள்.


Next Story