தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க சாலை விரிவாக்கம்


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு புதிய பஸ் நிறுத்தங்கள் அமைக்க சாலை விரிவாக்கம்
x
தினத்தந்தி 20 July 2017 3:50 AM IST (Updated: 20 July 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு மருத்துவக்கல்லூரி முன்பு புதிய பஸ்நிறுத்தங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக அந்த பகுதியில் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரியில் நேதாஜி பைபாஸ் சாலையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த சாலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகே வெண்ணாம்பட்டி செல்லும் ரோடு மற்றும் ரெயில் நிலையத்திற்கு செல்லும் ரோடு ஆகியவை பிரிந்து செல்கின்றன.

தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆயிரக்கணக்கான இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. இங்கு பஸ் நிறுத்தங்கள் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து சிக்னலும் உள்ளது. இந்த பகுதியில் அதிக வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி நுழைவாயில் பகுதியில் சுற்றுச்சுவரையொட்டி உள்ள சாலையில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதேபோல் சாலையின் மறுபுறத்தில் சேலம் நோக்கி செல்லும் வாகனங்கள் நின்று செல்வதற்காக சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பணி நிறைவடைந்த பின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் இந்த பகுதியில் சாலையின இருபுறங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மற்றும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டால் நேதாஜி பைபாஸ் சாலை மற்றும் ரெயில்நிலைய சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு ஏற்படும்.


Next Story