ஊத்துக்கோட்டையில் கொலையானவர் அடையாளம் தெரிந்தது நண்பர்கள் 2 பேர் கைது
ஊத்துக்கோட்டையில் கொலையானவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது அடையாளம் தெரிந்தது. அவரை பணத்தகராறில் நண்பர்களே அடித்துக்கொன்றதும் தெரியவந்தது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையில் உள்ள செட்டித்தெரு ரோட்டில் கடந்த 16-ந்தேதி தலையில் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது தெரியாமல் இருந்து வந்தது. அவர் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதுதொடர்பாக கொலையாளிகளை பிடிக்க ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தலைமையில் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலீசை கண்டு ஓட்டம்...
ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த 2 பேர் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையின்போது அவர்கள் கடலூரை சேர்ந்த சேகர்(35), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற மணி(45) என்பதும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆந்திர மாநிலம் புத்தூரை சேர்ந்த அவர்களது நண்பரான மூர்த்தி(30) என்பவரை பணத்தகராறில் செட்டித்தெருவில் அடித்துக்கொலை செய்ததும் தெரியவந்தது.
கொலையாளிகள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
பணத்தகராறு
நாங்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்தோம். ஊர்ஊராக சென்று குப்பை பொறுக்கி விற்று வந்தோம். அப்போது மூர்த்திக்கு ஒரு செல்போன் கிடைத்தது. இதை ஒருவரிடம் ரூ.900-க்கு மூர்த்தி விற்றார். அந்த பணத்தில் நாங்கள் பங்கு கேட்டோம். இதில் 3 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் சமரசமாகி அந்த பணத்தை தலா ரூ.300 ஆக பிரித்துக்கொண்டோம்.
கொலை செய்ய திட்டம்
மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது சேகர் சட்டை பையில் இருந்த ரூ.300ஐ காணவில்லை. இதுகுறித்து 2 பேரும் மூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறிவிட்டார். அப்போது எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் மூர்த்தியை கொலை செய்ய முடிவு செய்தோம். பின்னர் 3 பேரும் சேர்ந்து ஊத்துக்கோட்டை செட்டித்தெரு ரோட்டில் குப்பை பொறுக்க சென்றோம். அப்போது அங்கு சாலையோரமாக கிடந்த உருட்டுக்கட்டையால் 2 பேரும் சேர்ந்து மூர்த்தியை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
சிறையில் அடைப்பு
கைதான 2 பேரையும் போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story