பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் ஆய்வு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பேட்டி


பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் ஆய்வு  முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என பேட்டி
x
தினத்தந்தி 21 July 2017 3:00 AM IST (Updated: 21 July 2017 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நேற்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் டி.ஜி.பி. திடீர் ஆய்வு

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் கைதிகள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும், சசிகலா உள்ளிட்ட சில கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக கூறிய குற்றச்சாட்டுகள் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டார். சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவும், அந்த பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக மேகரிக்கும், டி.ஐ.ஜி.யாக ரேவண்ணாவும் நியமிக்கப்பட்டார்கள். இந்த நிலையில், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நேற்று மதியம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று திடீரென்று ஆய்வு நடத்தினார். சிறையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தியதுடன், சில கைதிகளிடமும், சிறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மேகரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு

‘‘கர்நாடக சிறைத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்ற பின்பு, பெங்களூரு சிறைக்கு வந்து ஆய்வு நடத்தினேன். சிறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவதால், அதுகுறித்தும் விசாரணை நடத்தினேன். சில கைதிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களையும், அவர்கள் சொல்லிய குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டேன். அதே நேரத்தில் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். அவர்களிடமும் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தி, சில தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளேன்.

நான் சிறையில் ஆய்வு மேற்கொண்டது, கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், சிறையில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை என தோன்றுகிறது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்த பின்பு தான் முறைகேடுகள் நடந்ததா? இல்லையா? என்பது தெரிய வரும். விசாரணை அதிகாரிக்கு, சிறைத்துறையின் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.

மற்ற சிறைகளுக்கு முன் மாதிரியாக...

சிறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். கைதிகளுக்கான விதிமுறைகள் என்ன? என்பது பற்றியும் தெரிவித்து இருக்கிறேன். சிறைத்துறைக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.

அந்த விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தடுக்கப்படும். மேலும் நாட்டில் உள்ள மற்ற சிறைகளுக்கு முன்மாதிரியாக பெங்களூரு சிறை மாற்றப்படும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story