மத்திய அரசு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்


மத்திய அரசு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 July 2017 4:15 AM IST (Updated: 21 July 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று நாகையில் நடந்த தேசிய மீனவர் பேரவை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்,

தேசிய மீனவர் பேரவை சார்பில் மீனவ மக்களின் வாழ்வாதாரங்களையும், கடலோர வளங்களையும் பாதுகாக்கக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி “விடியலைத்தேடி“ என்ற பிரசார பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை தமிழகத்தில் உள்ள மீனவர் கிராமங்களில் நடைபெறுகிறது. இந்த பிரசார பயணக்குழுவினர் நேற்று முன்தினம் நாகைக்கு வந்தனர். இதை தொடர்ந்து இரவு, நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் “விடியலைத்தேடி“ என்ற பிரசார பயண எழுச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தேசிய மீனவர் பேரவை துணை தலைவர் குமரவேலு தலைமை தாங்கினார். நாகை, காரைக்கால் மாவட்ட மீனவ கிராம நாட்டார், பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய மீனவர் பேரவை பொதுச்செயலாளர் பீட்டர், ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவன அமைப்பாளர் மங்கையர்செல்வன், கடலோர செயல்பாட்டு கூட்டமைப்பு அமைப்பாளர் ஜேசுரத்தினம், ஒருங்கிணைப்பாளர் ஜேசய்யாஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில், கடலோர முறைப்படுத்துதல் சட்டம் 1991-ஐ அமல்படுத்த வேண்டும்.

புதிய வரைவு முறைப் படுத்துதல் கடல் மற்றும் கடல்சார் அறிவிப்பாணை 2017-ஐ உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அனைத்து இறால் பண்ணைகளையும் மூட வேண்டும். நிலங்களையும், நீர்வளங்களையும் கடலோர சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வேண்டும். மீனவர்களையும், விவசாயிகளையும் முழுவதும் அழிக்கக்கூடிய சாகர்மாலா திட்டத்தை தடை செய்ய வேண்டும். மீனவளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். மீனவர்கள் அனைவருக்கும் குடியிருப்பு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநாட்டில் திருவாரூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் யோகநாதன், நாகை நாகராஜ், டெல்லி ஆதார குழுவை சேர்ந்த விஜயன், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த தெபாசிஸ்சியாமல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story