அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்


அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 21 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். குண்டும், குழியுமாக கிடக்கும் சாலைகளை சீரமைக்க வேண்டும். சுகாதார சீர்கேடு அடைந்துள்ள சாக்கடையை சீர் செய்ய வேண்டும். முறையான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமை தாங்கினார்.

வடக்கு மாநகர செயலாளர் முருகேசன், மேற்கு மாநகர செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட செயலாளர் தங்கவேலு, மாநிலக்குழு உறுப்பினர் ஜோதிலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையாளர் சதீசை சந்தித்து மாநகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கவேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. குப்பைகளை உடனுக்குடன் அள்ளாததால் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சினை என பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே, மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தற்போது மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story