ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. புறக்கணிக்கப்படவில்லை ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் பேட்டி


ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. புறக்கணிக்கப்படவில்லை ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் பேட்டி
x
தினத்தந்தி 22 July 2017 4:30 AM IST (Updated: 21 July 2017 11:32 PM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. புறக்கணிக்கப்படவில்லை என்று அந்த அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கூறினார்கள்.

துடியலூர்,

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதற்கிடையே, அ.தி.மு.க. 2–ஆக பிரிந்ததை தொடர்ந்து, பி.ஆர்.ஜி.அருண்குமார் (கோவை வடக்கு தொகுதி), வி.சி.ஆறுக்குட்டி (கவுண்டம்பாளையம்), ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப்பாளையம்) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி உள்ளதாக வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பேட்டியளித்தார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள கோவையை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கவுண்டம்பாளையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. தலைமையில் கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பூமி பூஜைக்கு முறையான அழைப்பிதழ் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் என்னை புறக்கணிக்கிறார்கள் என்று அவர் கூறுவது தவறு ஆகும். அவர் புறக்கணிக்கப்பட வில்லை.

அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் குடும்ப அரசியலுக்கு இடம் அளிக்க வில்லை. தொண்டர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து வந்தார்கள். ஜெயலலிதா மறைந்த பின்னர், அந்த இடத்தை நிரப்புவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மக்களை சந்தித்து வருகிறார்.

பிரிந்த இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேருவதற்காக குழு அமைக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை நடைபெறாமல் நின்றுவிட்டது. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனம்விட்டு பேசி இருந்தால் இரு அணிகளுமே சேர்ந்து இருக்கும். ஆனால் அவர் பேசவில்லை.

நாங்கள் தொண்டர்கள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்களை சந்தித்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. எங்களுக்கு பதவி ஆசை இல்லை. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அவர்களின் கொள்கைபடி அ.தி.மு.க.வை 100 ஆண்டு காலம் நிலைநிறுத்த தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்கள் மக்கள் சேவை ஆற்றி வருகிறோம்.

எனவே வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. கூறும் கருத்துகள் தவறானவை ஆகும். அ.தி.மு.க. தொண்டர் கள் மற்றும் பொதுமக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியைதான் விரும்புகிறார்கள். வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. எந்த அணியில் சேர்ந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. அது அவருடைய சொந்த விருப்பம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story