காரை வழிமறித்து தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் சிக்கினர் கூலிப்படையினரா? போலீஸ் விசாரணை


காரை வழிமறித்து தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேர் சிக்கினர் கூலிப்படையினரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 July 2017 2:10 AM IST (Updated: 22 July 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

கொரகஜ்ஜேகட்டே சாலையில் காரை வழிமறித்து தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு,

கொரகஜ்ஜேகட்டே சாலையில் காரை வழிமறித்து தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கூலிப்படையினரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

தொழில் அதிபர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் நந்திகுட்டே பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித்(வயது 27). தொழில் அதிபர். இவர் கடந்த 18–ந் தேதி தனது காரில் கொரகஜ்ஜேகட்டே சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிச்சென்றார். அப்போது இவரது காரை முந்திக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சென்றனர்.

பின்னர் அவர்கள் திடீரென்று அபிஜித்தின் காரை வழிமறித்தனர். அவர்கள் எதற்காக காரை வழிமறித்தார்கள் என்று அபிஜித் சுதாரிப்பதற்குள், அந்த வாலிபர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அபிஜித்தை தாக்கி கொல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

3 பேர் சிக்கினர்

இந்த நிலையில் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்கள் வருவதைப்பார்த்த அந்த வாலிபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து அபிஜித் பாண்டேஸ்வர் போலீசில் புகார் செய்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அபிஜித்தை கொல்ல முயன்றது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(20), பிரீதம்(22), தீரஜ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது. ஆனால் அவர்கள் எதற்காக அபிஜித்தை கொல்ல முயன்றார்கள், அவர்கள் கூலிப்படையினரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர்கள் 3 பேர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story