கவர்னரை தவறாக சித்தரிக்க வேண்டாம் நாராயணசாமி வேண்டுகோள்


கவர்னரை தவறாக சித்தரிக்க வேண்டாம் நாராயணசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 July 2017 4:00 AM IST (Updated: 22 July 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரைப்பற்றி யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி, 

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதில் இல்லை

மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் படித்து ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அதை சென்னை ஐகோர்ட்டு ரத்துசெய்துவிட்டது. இதேபோல் புதுவை மாணவர்களுக்கும் 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம்.

புதுவை மாநிலத்திற்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று நமது சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். நமது மாநிலத்தில் கடந்த ஆண்டைப்போலவே சென்டாக் மூலம் கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

உரிமைகள் பறிப்பு

இதனால் புதுவை மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்கீழ் வர அவர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகள் தேவைப்படும். எனவே கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் விலக்கு அளிக்கவேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பி உள்ளேன். மத்திய மந்திரிகளையும் சந்தித்து பேசியுள்ளேன்.

அதேபோல் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான விதிமுறையையும் மாற்றி மத்திய அரசு மாநில உரிமையை பறித்துள்ளது. கல்வி என்பது மாநில பட்டியலில் வருகிறது. அதை மத்திய அரசு கையில் எடுத்துக்கொண்டு மாநிலங்களை ஆட்டுவிக்கிறது. மத்திய அரசு கல்வி சம்பந்தமான விஷயத்தை கையில் எடுத்துக்கொள்கிறது. இது மத்திய, மாநில அரசின் உறவுகளை பெரிய அளவில் பாதிக்கும்.

விமர்சனத்தை தவிர்க்கவேண்டும்

புதுவை மாநிலத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் வலியுறுத்திட பாராளுமன்ற மேலவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத்திடம் கேட்டுள்ளேன். ஓரிரு தினங்களில் நானும் டெல்லி சென்று இதுதொடர்பாக மத்திய மந்திரியிடம் பேச உள்ளேன்.

கவர்னர் குறித்து விமர்சனம் செய்யவேண்டாம் என்று நான் ஏற்கனவே கூறியுள்ளேன். புதுவை மக்கள் அமைதியை விரும்புகிறவர்கள். கவர்னரை தவறாக சித்தரிப்பது உகந்தது அல்ல. யார் தவறு செய்தாலும் மக்களே தட்டிக்கேட்பார்கள். 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்திலும் மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளது. எனவே காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கவர்னரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினையை காங்கிரஸ் எழுப்பும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். 

Next Story