இலவச பஸ் பயண அட்டை மூலம் அரசு விரைவு பஸ்களில் மாணவ, மாணவிகள் பயணம் செய்ய நடவடிக்கை கோரி சாலை மறியல்
இலவச பஸ் பயண அட்டை மூலம் அரசு விரைவு பஸ்களில் மாணவ, மாணவிகள் பயணம் செய்ய நடவடிக்கை கோரி சாலை மறியல் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருமானூர்,
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் அரசு பஸ்களில் சென்று வர வசதியாக தமிழக அரசால் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த பயண அட்டை மூலம் மாணவ, மாணவிக இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரியலூர்–தஞ்சாவூர் மார்க்கத்தில் செல்லும் அரசு விரைவு (எக்ஸ்பிரஸ்) பஸ்களில் இலவச பஸ் பயண அட்டை வைத்துள்ள மாணவ, மாணவிகளை ஏற்றி செல்வதில்லை எனவும், கண்டக்டர் கீழே இறங்கச்சொல்வதாகவும் மாணவர்கள் புகார் கூறினர். இதனால் அரசு விரைவு பஸ்சிலும் இலவச பஸ் பயண அட்டை மூலம் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி நேற்று காலை திருமானூர் பஸ் நிலையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வரும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். திருமானூரில் இருந்து அரியலூருக்கும், தஞ்சாவூருக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ, மாணவிகள் கோஷமிட்டனர்.
மறியலில், தி.மு.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் மற்றும் அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளை மேலாளர் செந்தில்குமார், திருவையாறு கிளை மேலாளர் ரவிசங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும், அரசு விரைவு பஸ்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அரியலூர்–தஞ்சாவூர் சாலையில் 2½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.