வாக்குச்சாவடி அளவில் குறைந்தபட்சம் 50 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், துரை திவ்யநாதன் பேச்சு
வாக்குச்சாவடி அளவில் குறைந்தபட்சம் 50 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று 3 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர் துரை திவ்யநாதன் கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திருச்சி மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கையின் மேலிட பார்வையாளர் துரை திவ்யநாதன் கலந்து கொண்டு பேசுகையில் ‘தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டம் வருகிற 25–ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் மாநில தலைவர் வேண்டுகோள் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்குச்சாவடி அளவில் குறைந்த பட்சம் 50 புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். கட்சியின் முக்கிய அறிவிப்புகள், தகவல்கள் அனைத்தும் இனி இணையதளம் மூலமாகவே வெளியிடப்படும் என்பதால், வட்டார நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை அனைவரும் கணினி பயன்பாட்டை முறையாக தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்’ என்றார்.
கட்சியின் மாநில ஊடக பிரிவு செயலாளர் பெனட் அந்தோணி ராஜ் பேசுகையில், பூத் கமிட்டி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை, இதற்காக அறிவிக்கப்பட்டு உள்ள செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்ப வேண்டும். இதே போல் வட்டார, நகர, சர்க்கிள் தலைவர்கள் மாவட்ட தலைவருக்கும், மாவட்ட தலைவர்கள் மாநில தலைவருக்கும் குறுந்தகவல்களை அனுப்ப வேண்டும். வரும் காலங்களில் ஊடக அறிவிப்புகள் வெளியிடப்படாது, என்று குறிப்பிட்டார்.
மாவட்ட தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் கோபால், சந்தான கிருஷ்ணன், விவசாய அணி மாநில செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் ரவி, முன்னாள் தலைவர்கள் சரவணன், ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகி அறவானூர் விச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.