நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி தி.மு.க.வினர் திடீர் போராட்டம்


நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி தி.மு.க.வினர் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2017 3:30 AM IST (Updated: 22 July 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்ததையொட்டி அவரது நினைவாக நாகர்கோவில் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஜெயலலிதாவின் உருவ மணல் சிற்பம் அமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே அந்த மணல் சிற்பத்தை அகற்ற வேண்டும் என தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் டிரான்ஸ்பார்மர் திருப்பம் அருகே இருந்த தி.மு.க. கொடிக்கம்பத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக்கூறி அகற்றியதாக கூறப்படுகிறது. உடனே அங்கு திரண்ட தி.மு.க.வினர் வடசேரியில் உள்ள ஜெயலலிதாவின் உருவ மணல் சிற்பத்தையும் அகற்ற வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தகவல் அறிந்த குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் நகர செயலாளர் வக்கீல் மகேஷ், மீனவரணி மாநில செயலாளர் பெர்னார்டு, நிர்வாகிகள் ஷேக்தாவூது, பெஞ்சமின், நெடுஞ்செழியன், குமார், வேல்முருகன், ஜெயசிங், வக்கீல் உதயகுமார், சீதாமுருகன், சாகுல்ஹமீது, ரெஞ்சித், வால்டர் உள்ளிட்டோர் நேற்று மதியம் 1 மணி அளவில் வடசேரி எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு சென்றனர்.

இதுபற்றிய தகவலை அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் பர்ணபாஸ் (வடசேரி), அன்பு பிரகாஷ் (கோட்டார்) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். மேலும் ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை சுற்றிலும் இரும்பு பேரிகாட்களால் தடுப்பு அமைக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வந்த தி.மு.க.வினர் மணல் சிற்பத்தை அகற்றக்கோரி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு சாலையிலும் அமர்ந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

3 மணி நேர போராட்டம்

உடனே நாகர்கோவில் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு உள்ளிட்ட அதிகாரிகள் தி.மு.க. வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஜெயலலிதாவின் மணல் சிற்பத்தை அகற்றினால் தான் அங்கிருந்து புறப்பட்டுச் செல்வோம் என்று கூறி தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த மணல் சிற்பத்தை அகற்றாவிட்டால் சிலையின் மறுபுறத்தில் பெரியார் மற்றும் காமராஜர் மணல் சிற்பங்களை அமைப்போம் என எழுதப்பட்ட பேனரையும் தி.மு.க.வினர் அங்கு கட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இன்று (அதாவது நேற்று) மாலையில் கலெக் டர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்துப்பேசி மணல் சிற்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம். எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். அதை ஏற்று தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இதனையடுத்து இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நாளை (அதாவது இன்று) நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சுமூக தீர்வு காணப்படும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க.வினரிடம் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார். 

Next Story