தேசிய வாழைத்திருவிழா 100-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன


தேசிய வாழைத்திருவிழா  100-க்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 22 July 2017 6:30 AM GMT (Updated: 22 July 2017 6:29 AM GMT)

மதுரையில் தேசிய வாழைத் திருவிழா நேற்று தொடங்கியது.

மதுரை,

மதுரை வேளாண்மை கல்லூரியில், தேசிய வாழைத்திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை, தமிழக அரசும், இந்திய தொழிற்கூட்டமைப்பும் இணைந்து நடத்துகின்றன.

இந்த விழாவையொட்டி, வாழை பயிரிடும் முறை குறித்தும், அதன் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கமும் நடந்தன. வாழை விழாவை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, துரைகண்ணு, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

100 ரகங்கள்

வாழைத்திருவிழாவையொட்டி, வாழைப்பழங்களின் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் நாழிப்பூவன், வாழைநாடு, சிங்கன், நெய்பூவன், கற்பூரவள்ளி, ஆயிரம் காய்ச்சி, செவ்வாழை, ஜி-9, சக்கபேயன், ரஸ்தாளி, நேந்திரன், மொந்தன், மட்டி, விருப்பாச்சி, செம்மட்டி, குதிரைவாலி, சக்கை, கிராண்ட் நைன் உள்பட 100-க்கும் மேற்பட்ட வாழைப் பழரகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மட்டி ரக வாழைப்பழம் அதிகம் சத்து உள்ளது என்றும், உணவு உண்ணத் தொடங்கும் குழந்தைகளுக்கு இந்த பழத்தை முதலில் கொடுக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியில் கொல்லி மலையில் கிடைக்கும் மனோரஞ்சிதம் வாழைப்பழம் காட்சிக்கு வைக்க வில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதாவது இந்த வாழை, பழுத்தால் மனோரஞ்சிதம் வாசனை வீசும் என்றும், வறட்சியை தாங்கி இது வளராது என்பதால் இந்த ஆண்டு இந்த பழம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இன்றும் நாளையும் பார்க்கலாம்

இந்த வாழைவிழாவில், நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த கண்காட்சியில் வாழை பொருட்களில் இருந்து தயார் செய்யப்பட்ட வேட்டி, சேலை, பைகள், கூடைகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. வாழைத் தண்டு, வாழைப்பூ ஆகியவற்றில் இருந்து செய்யப்பட்ட டிராகன் சிலையும், கோவிலும் கண்காட்சிக்கு அழகு சேர்க்கின்றன. இந்த வாழைத்திருவிழா இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) நடக்கிறது.


Next Story