தெறி தமிழ் தலைவாஸ்!


தெறி தமிழ் தலைவாஸ்!
x
தினத்தந்தி 22 July 2017 5:00 PM GMT (Updated: 22 July 2017 8:22 AM GMT)

பொறி பறக்கும் பயிற்சியில் ‘தமிழ் தலைவாஸ்’ வீரர்கள்... அனலாய்ப் பாயும்அஜய் தாக்குர்! பயிற்சியாளர் பாஸ்கரன்

ஒரே வாரம்! கபடித் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிடும்.
ஆம், ‘புரோ கபடி லீக்’ ஐந்தாவது சீசன் தொடங்கவிருக்கிறதே?

இந்த முறை தமிழகத்தின் சார்பில் ‘தமிழ் தலைவாஸ்’ அணி களமிறங்க இருப்பது, கபடி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்திருக்கிறது.
திமிறும் இளமையும், சீனியர் வீரர்களின் சீரிய திறமையுமாக தாறுமாறாக பட்டையைக் கிளப்பக் காத்திருக்கிறது, ‘தமிழ் தலைவாஸ்’.

தயாராகிறார்கள், ‘தமிழ் தலைவாஸ்’

தமிழகம் முழுவதும் வலம் வந்து, உள்ளூர் அணிகளுடன் மோதி தம்மைத் தயார்ப்படுத்தி வருகிறார்கள், தமிழ் தலைவாஸ் வீரர்கள்.
கோவை, உடுமலைப்பேட்டை, புதுக்கோட்டை திருமயம், மதுரை, திருநெல்வேலி ஆலங்குளம், தூத்துக்குடி குளத்தூர், கன்னியாகுமரி பெருமாள்புரம் என்று தமிழகம் முழுக்கப் பயணித்த தங்களுக்கு மக்களும், கபடி ரசிகர்களும் ஆரவார உற்சாக வரவேற்பு அளித்தனர் என்று ஒட்டுமொத்த அணியினரும் கூறுகின்றனர்.

இந்தப் பயணத்தால், அணிக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது மட்டுமல்லாமல், வீரர்கள் நல்ல பயிற்சியும் பெற்றனர் என்கிறார், பயிற்சியாளர் பாஸ்கரன்.
“ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு இடையே விளையாடும் கபடி வீரர்களுக்கு, வெளியே இருக்கும் பயிற்சி யாளரின் சைகையைப் புரிந்துகொள்ளும் திறன் வேண்டும். எங்கள் அணியில் சில புதிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு, பயிற்சியாளரின் சைகையை உணரும் நுட்பத்தை நாங்கள் இந்த கண்காட்சிப் போட்டிகள் மூலமாகக் கற்றுக்கொடுத்தோம்” என்கிறார்.

இந்த ஐந்தாவது புரோ கபடி லீக் சீசனில்தான் தமிழக அணி முதன்முதலாக அடியெடுத்து வைக்கிறது.

கபடியின் தாய்மண்ணான தமிழகத்தில் இருந்து இதற்கு முன்பே அணி களம் கண்டிருக்க வேண்டும் என்ற ஆதங்கம், கபடி ஆர்வலர்கள் மத்தியில் இருந்தாலும், இப்போதாவது அணி உருவாகியிருக்கிறதே என்ற நிம்மதி கலந்த சந்தோஷமும் இருக்கிறது.

அசத்தல் அஜய் தாக்குர்

தமிழ் தலைவாஸின் ‘தலைவர்’, அஜய் தாக்குர். இவர் இருப்பதே அணிக்கு அசுர பலம் தந்துவிடுவதாகக் கூறுகிறார்கள் சக வீரர்கள்.
இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த அஜய், இந்திய கபடி அணியின் இணையற்ற வீரர்களில் ஒருவர்.

கடந்த ஆண்டு இந்தியா உலகக் கோப்பையைக் கைப்பற்றியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. அந்தப் போட்டியில் ‘நம்பர் 1’ ரெய்டராகத் திகழ்ந்த அஜய், அதிக ரைடு புள்ளிகளைக் குவித்தார். ஈரானுக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் முக்கியமான புள்ளிகளைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். அதனால்தான், தொடரின் சிறந்த வீரராகவும் தேர்வு பெற்றார்.

அதேபோல 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தாக்குரின் நல்ல தாக்கம் உண்டு. அஜய் தாக்குரின் அபார திறமையுடன், அவரது 14 ஆண்டு கால அனுபவமும் தங்களுக்குக் கைகொடுக் கும் என்று தமிழ் தலைவாஸ் நம்புகின்றனர்.

ஒவ்வொரு பாயிண்டையும் குவித்ததும் அஜய் தாக்குர் மேற்கொள்ளும் ‘தவளை தாவலுக்கு’ தனி ரசிகர் கூட்டம் உண்டு.

நம்பிக்கை உண்டு

‘புதிய அணிக்கேற்ப எப்படி ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்ளப் போகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு,

“உண்மையைச் சொல்வது என்றால், அது கொஞ்சம் கடினம். ஆரம்பத்தில் சிற்சில தடைகள் எழலாம். ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஓர் அணியாக, ஒற்றுமையாக சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பல வீரர்கள் இருக்கையில், களத்தில் ஆடும் சரியான அணியைத் தேர்வு செய்வதும் முக்கியம். காரணம், கடைசியில் ஆடப்போவது 7 பேர்தானே? நாங்கள் ஒவ்வொருவரும் நல்ல வீரர்களாக இருக்கலாம். ஆனால் ஒருவரை ஒருவர் அவரவர் ஆட்டம், இயல்பு எல்லாவற்றின் அடிப்படையிலும் புரிந்துகொள்வதும், வியூகத்தின்படி ஒற்றுமையாக ஆடுவதும் முக்கியம்” என்று நடைமுறை சார்ந்தவராகப் பேசு கிறார், அஜய் தாக்குர்.

“நாம் வகுக்கும் வியூகத்தை களத்தில் 60 சதவீதம் செயல்படுத்தினாலே போதும். வெற்றி தானாக வந்துவிடும்” என்கிறார் பாஸ்கரன்.

இளம் வீரர்கள், சீனியர் வீரர்கள் என்ற சரியான கலவை இருப்பது அணிக்கு நன்மை அளிக்கும் என்பது பாஸ்கரனின் கருத்து. போட்டிகள் 3 மாத காலம் நடக்கப் போவதால், காயம் அடைந்தால் இளம் வீரர்களால் விரைவாக மீள முடியும் என்கிறார் இவர்.

திருச்சி திவாகரன் போன்ற தமிழக வீரர்கள் தமிழ் தலைவாஸ் மூலம் களம் காண்கிறார்கள்.

“தமிழக அணி போன்றவற்றில் ஆடியிருக்கும் எனக்கு, தமிழ் தலைவாஸ் ஒரு சிறந்த வாய்ப்பு. இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள முயல்வேன்” என்று திவாகரன் தெம்பாகப் பேசுகிறார்.

தென்கொரிய, மலேசிய வீரர்கள்

தென்கொரிய வீரரான டோங் ஜியோன் லீயும், மலேசிய வீரர் முகிலனும் கூட தமிழ் தலைவாஸின் புதிய படை வீரர்கள்.

கடந்த உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி தோல்வி அளித்தது, தென்கொரியா. அதில் டோங் லீக்குப் பங்கிருக்கிறது.
“டோங் லீ எதையும் விரைவாக கிரகித்துக்கொள் கிறார். அதை நம்மூர் வீரர் களுக்குக் கூட நான் சுட்டிக் காட்டினேன்” என்கிறார், பயிற்சியாளர் பாஸ்கரன்.

மலேசிய அணி வீரரான முகிலனும் தமிழ் தலைவாஸ் அணியில் ஆடுவதில் மகிழ்ச்சி என்கிறார்.

“நான் இதற்கு முன்பே தமிழகம் வந்திருக்கிறேன். தமிழ் தலைவாஸ் அணியில் நல்ல பயிற்சியாளரின் வழிகாட்டலில், சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதில் சந்தோஷம்” என்று வெற்றிக்கு அறிகுறியாய் கட்டைவிரலை உயர்த்துகிறார், முகிலன்.

சச்சின்... சந்தோஷம்

தமிழ் தலைவாஸின் இணை உரிமையாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இருப்பதும் இந்த அணி வீரர்களுக்கு பெருமிதத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

“கிரிக்கெட்டின் கடவுளாக, ஓர் அதிசிறந்த விளையாட்டு வீரராக எட்டமுடியாத உயரத்தில் இருப்பவர், சச்சின். அவரது அணியில் ஆடப் போகிறோம் என்பது எங்களுக்கு எல்லாம் பெருமையாக இருக்கிறது. எங்கள் ஆட்டத்தை அவர் நேரடியாக அமர்ந்து பார்ப்பார் என்பதே கூடுதல் உற்சாகம் தருகிறது” என்கிறார், அஜய் தாக்குர்.

அஜய் தாக்குரைப் போலவே, அமித் ஹுடா, அனில்குமார், பிரபஞ்சன், அருண், டோங் லீ ஆகியோரும் அணியின் தூண்களாக இருக்கிறார்கள்.

வாசல் திறக்கிறது

கபடியில் இயற்கையாகவே ஆர்வமும், திறமையும் கொண்ட தமிழக கிராமத்து இளைஞர்களுக்கு புதிதாக ஒரு பெரிய வாசல் திறந்திருக்கிறது.
“இன்று புரோ கபடி லீக் அளவில் கபடி ஆடும் வீரர்களின் வசதியும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கின்றன. ஆனால் நம்முடைய விளையாட்டான இதற்கு, அரசாங்கமும் கைகொடுக்க வேண்டும்” என்பது பாஸ்கரனின் வேண்டுகோள்.

தமிழ் தலைவாஸ் அணி முதல் பிரவேசத்திலேயே சிறப்பாக ஆடும் என்று விவரம் அறிந்த கபடி ரசிகர்கள் நம்பிக்கை கொள்வதற்கு ஒரு முக்கியக் காரணம், பயிற்சியாளர் பாஸ்கரன்.

புரோ கபடி லீக் தொடக்க சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியின் பயிற்சியாளராக அந்த அணி கோப்பை வெல்ல பாஸ்கரன் உதவினார். கடந்த உலகக் கோப்பையில் இந்தியா வெற்றிவாகை சூட வழிகாட்டினார்.
“சிறுவர்கள் மல்லுக்கட்டி விளையாடுவது கூட கபடிதான். ஏன், விலங்குகள் கூட கபடி விளையாடுகின்றன. உடம்புக்கு உரமும், உள்ளத்துக்கு தெம்பும் ஏற்றுகின்ற விளையாட்டு கபடி. அதில் நமது தமிழக அணி புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதிலும், அதில் எனது பங்கும் இருப்பதில் மகிழ்கிறேன்” என்கிறார்.

எதிரணிகளை தெறிக்கவிடும் துடிப்போடு களமிறங்கும் தமிழ் தலைவாஸை காண நாமும் ரெடிதானே!

Next Story