தி.மு.க.வினர் சீர்படுத்திய 17 ஏரி, குளங்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு


தி.மு.க.வினர் சீர்படுத்திய 17 ஏரி, குளங்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 22 July 2017 9:30 PM GMT (Updated: 2017-07-22T19:49:17+05:30)

திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க.வினர் சீர்படுத்திய 17 ஏரி, குளங்களை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை,

தமிழகம் முழுவதும் உள்ள ஏரி மற்றும் குளங்களை தி.மு.க.வினர் தூர்வாரி சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போன ஏரி, குளம் உள்ளிட்ட 17 நீர்நிலைகள் தி.மு.க. சார்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. அவற்றை, மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார்.

நேற்று முன்தினம் இரவு மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், தி.மு.க.வினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, இரவு திருவண்ணாமலையில் தங்கி ஓய்வெடுத்த மு.க.ஸ்டாலின் நேற்று காலை, நீர்நிலைகளை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலையில் காலை 6.30 மணிக்கு அவரது பயணம் தொடங்கியது. முதலில், திருவண்ணாமலை நகரில் தூர்வாரப்பட்ட எல்லை பிள்ளையார் குளத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர், குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் ராகவேந்திர நகர் மறநாய்க்கன் குளம், பெருமாள் நகர் வாணியங்குளம், முதலியார் குளம், வேட்டவலத்தில் உள்ள சிங்கார வேலர் குளம், அரடாப்பட்டு கும்லாப்பட்டு ஏரி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார்.

முன்னதாக வேட்டவலம் செல்லும் வழியில் சாலையோரம் உள்ள டீக்கடையில் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, பிச்சாண்டி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் டீ குடித்தனர்.

இதையடுத்து அரடாப்பட்டு கும்லாப்பட்டு ஏரியை பார்வையிட்டு திரும்பி வரும் வழியில் ஆவூர் பகுதியில் உள்ள ஸ்ரீலோகநாயகி அம்மன் சமேத திருவகத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அப்போது பொதுமக்கள், இந்த கோவில் சீரமைக்க நிதியில்லாததால் பாதியில் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அப்போது மு.க.ஸ்டாலின், விரைவில் நம்ம ஆட்சி வரும். சரிசெய்து விடலாம் என்றார்.

இதையடுத்து திருவண்ணாமலை தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தளபதி நூலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, நூலக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அஸ்வநாதசுரனை பச்சாத்தம்மன் குளம், பேகோபுரம் மெயின் தெருவில் உள்ள பிள்ளைக்குளம், ஜடாயுதீர்த்தம், போளூர் ரோட்டில் உள்ள செட்டிகுளம், தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள மேட்டுபாளையம் குளம், பூமால் செட்டிகுளம், துளசிராமர் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மேலும் இரும்பேடு நல்லதண்ணீர் குளம், ஆரணி பழங்காமூர் குளம், ஆரணி நாவல்பாக்கம் ஏரி, புரிசை கெங்கையம்மன் கோவில் குளம், வந்தவாசி முன்முனி நல்லதண்ணீர் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மேலும் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட அனைத்து நீர் நிலைகளிலும் மரக்கன்று நடப்பட்டன.


Next Story