விவசாயிகளுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டு அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


விவசாயிகளுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டு அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 22 July 2017 9:45 PM GMT (Updated: 2017-07-22T22:43:23+05:30)

சிவகங்கையில் நடைபெற்ற விழாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க விவசாய உறுப்பினர்களுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் விவசாயிகளுக்கு ரூபே கார்டுகள் வழங்கும் விழா, மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி வரவேற்று பேசினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:– தமிழக அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடக்கூடிய அரசாக விளங்குகிறது. விவசாயத்தில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய மக்கள் மேம்பாடு அடைய அரசு எப்போதும் துணை நிற்கும். அதற்கேற்ப தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கும், அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மூலம் விவசாய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன்களை தேவையான நேரத்தில், தேவையான அளவு எடுத்து பயன்படுத்த வசதியாக ரூபே விவசாய கடன் ஏ.டி.எம். கார்டுகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இந்த ஏ.டி.எம். கார்டுகளை வசதி படைத்தவர்கள் வைத்திருந்தார்கள். தற்போது அந்த நிலை மாறி விவசாயிகளும் பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. இதை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 733 பேருக்கு ரூபே கார்டு வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து மற்றவர்களுக்கும் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கணக்கு வைத்துள்ள விவசாய உறுப்பினர்கள் அனைவரும் இந்த கார்டுகள் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த கார்டை பயன்படுத்தி எந்த வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்திலும் பணத்தை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் திலீப்குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரரமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story