காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் பேட்டி
காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெக்லான் பாக்கவி கூறினார்.
தஞ்சாவூர்,
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வந்த எல்லோரையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியலுக்கு வந்த எத்தனை பேர் இன்றை இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார்கள். ரஜினியும், கமல்ஹாசனும் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அவர்கள் வரும்போது அவர்களை மக்கள் ஏற்று கொள்ள வேண்டுமா? வேண்டாமா? அவர்களது கொள்கை என்ன? என்பது குறித்து கருத்து தெரிவிப்போம்.
டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பொய்த்துவிட்டன. விவசாயிகள் கடனாளிகளாகிவிட்டனர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்தியஅரசு செயல்படுத்தவில்லை. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை.
கர்நாடகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக குறுகிய மனப்பான்மையுடன் தமிழகத்திற்கு எதிராக பா.ஜனதா கட்சி செயல்படுகிறது. அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு பலமுறை தீர்ப்பு கூறியும் கர்நாடகஅரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை புறக்கணிக்கும் பா.ஜனதா கட்சியை கண்டிக்கிறோம். இவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது. இதற்கு மாநில தலைவர் தெக்லான் பாக்கவி தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, மாநில செயலாளர் அமீர்ஹம்ன், மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர்.