மதுக்கடை திறக்க ஆதரவு–எதிர்ப்பு: இருதரப்பினரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை
தஞ்சை அருகே மதுக்கடை திறக்க ஆதரவு–எதிர்ப்பு இருந்ததால் இருதரப்பினரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த வல்லம் அருகே உள்ள சென்னம்பட்டி சுடுகாடு அருகே மதுக்கடை அமைக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கடை கடந்த 20–ந் தேதி திறக்கப்பட்டது. இதற்கு அதே ஊரை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 மணிநேரத்தில் கடை மூடப்பட்டது. ஆனால் மற்றொரு தரப்பினர் மதுக்கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனால் இரு தரப்பினரையும் அழைத்து தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உதவி ஆணையர்(கலால்) இன்னாசிமுத்து, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார் தங்கபிரபாகரன், டாஸ்மாக் உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதலில் மதுக்கடை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த மக்களை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், மதுக்கடை வந்தால் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பிரச்சினை எழ வாய்ப்பு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே மதுக்கடையை திறக்கக்கூடாது என்றனர்.
அதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசும்போது, சென்னம்பட்டி பகுதியில் 2 மதுக்கடைகள் இருந்தன. இந்த கடைகள் மூலம் தினமும் ரூ.7 லட்சம் வரை விற்பனையானது. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடை இல்லையென்பதால் யாரும் குடிக்காமல் இல்லை. வெளியூரில் இருந்து கூடுதல் விலைக்கு வாங்கி வந்து குடிக்கிறார்கள். அந்த வருமானம் தனியாருக்கு செல்கிறது. அதே வருமானம் அரசுக்கு வந்தால் அது மீண்டும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக வந்து சேரும். நல்ல வருமானம் வந்த இடத்தில் எதற்காக கடையை திறக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்று உயர் அதிகாரிகள் கேள்வி கேட்கின்றனர். இந்த இடம் வேண்டாம் என்றால் நீங்களே ஒரு இடத்தை தேர்வு செய்து சொல்லுங்கள் என்றனர்.
ஆனால் இறுதிவரை எங்களுக்கு மதுக்கடை வேண்டாம் என்பதில் பிடிவாதமாக மக்கள் இருந்தனர். பின்னர் மதுக்கடை வேண்டும் என்று கூறிய மற்றொரு தரப்பினரை அழைத்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், மதுக்கடை இருந்தபோது சாராயம் இல்லை. இப்போது ஊரில் சாராயம் விற்கப்படுகிறது. சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்றால் மதுக்கடையை திறக்க வேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் கூறும்போது, சாராயம் விற்பதாக ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது. அப்படி யாராவது விற்றால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். மதுக்கடை வேண்டாம் என்று உங்கள் ஊரில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் கிராமத்தில் ஆலோசனை செய்து ஒரு முடிவை தெரிவியுங்கள் என்றனர்.
இரு தரப்பினரின் கருத்தையும் கேட்ட அதிகாரிகள், 3 மாத காலத்திற்கு மதுக்கடை அதே இடத்தில் செயல்படட்டும் என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடையை திறந்தால் போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு ஒரு தரப்பினர் வெளியே புறப்பட்டு சென்றனர். இரு தரப்பினரும் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மேல் அதிகாரிகளின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் தங்கபிரபாகரன் தெரிவித்தார்.
மதுக்கடை இல்லை என்பதால் சாராயம் விற்கப்படுவதாகவும், அதனால் மதுக்கடை திறக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்களே என அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பெண்கள் சிலர் ஆவேசமாக, சாராயம் எதுவும் விற்கப்படவில்லை. சாராயத்திற்கு மாற்று மது என்றால் மதுவுக்கு மாற்று எதை கொண்டு வருவீர்கள். சாராயம் விற்கப்படுவதாக புகார் வந்தால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மதுக்கடையை கொண்டு வர முயற்சி செய்யக்கூடாது என்று கூறினர்.
மதுக்கடை கொண்டு வருவதில் சென்னம்பட்டி கிராமமக்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மதுக்கடை வேண்டாம் என்று கூறியவர்களுடன் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வியும் பங்கேற்றார். இதை பார்த்த மற்றொரு தரப்பினர், சென்னம்பட்டி பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வெண்டையம்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வி எதற்காக வந்தார் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.