கோவில்பட்டியில் துணிகரம் மளிகைக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


கோவில்பட்டியில் துணிகரம் மளிகைக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 23 July 2017 2:00 AM IST (Updated: 23 July 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மளிகைக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் மளிகைக்கடைக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

மளிகை கடையில்...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 55). இவர் கோவில்பட்டி– எட்டயபுரம் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 6 மணி அளவில் மளிகை கடையை திறந்தார்.

அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளிலேயே இருந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று, மளிகை கடையில் பொருட்களை வாங்குவது போன்று கண்ணம்மாளிடம் பேசினார்.

5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

அப்போது அந்த நபர் திடீரென்று மளிகை கடைக்குள் புகுந்து கண்ணம்மாளின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் ஓடிச் சென்று, அங்கு மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்தவருடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். கண்ணம்மாள் ‘திருடன், திருடன்‘ என்று கூச்சலிட்டார். ஆனாலும் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த 2 பேரும் தப்பி சென்று விட்டனர்.

கண் அமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய தகவல் அறிந்தவுடன் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்– இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் தேடுகிறது

அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதிகாலையில் மளிகை கடையில் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story