பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலி


பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 23 July 2017 3:30 AM IST (Updated: 23 July 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பாலத்தின் தடுப்பு சுவரில் வேன் மோதி பள்ளத்தில் பாய்ந்ததில் குழந்தை உள்பட 2 பேர் பலி 5 பேர் படுகாயம்

பெருமாநல்லூர்,

திருவண்ணாமலை மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி பகுதியை சேர்ந்தவர் முகுந்தன்மாதவன் (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பாரதிபிரியா (27). இவர்களுக்கு 7 மாதத்தில் தர்மேஷ் என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சியை கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் நடத்துவது என இந்த தம்பதி முடிவு செய்து இருந்தனர்.

அதன்படி தனக்கு சொந்தமான வேனில் முகுந்தன்மாதவன், அவருடைய மனைவி பாரதிபிரியா, இவர்களின் குழந்தை தர்மேஷ் மற்றும் முகுந்தன்மாதவனின் தாய் விஜயா (57), சித்தி பிரேமா (55), பாரதிபிரியாவின் தாய் கீதா (55) ஆகியோர் கல்லாவியில் இருந்து கேரள மாநிலம், குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். வேனை கல்லாவி பகுதியை சேர்ந்த அசோக் (22) என்பவர் ஓட்டிச்சென்றார்.

குருவாயூர் கோவிலில் குழந்தை தர்மேசுக்கு சோறுட்டும் நிகழ்ச்சி முடிந்ததும், அதே வேனில் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். வேனின் முன் இருக்கையில் முகுந்தன்மாதவன் அமர்ந்து இருந்தார். வேனின் பின் பகுதியில் உள்ள இருக்கையில் மற்ற அனைவரும் அமர்ந்து இருந்தனர். தனது குழந்தை தர்மேசை பாரதி பிரியா தனது மடியில் வைத்து இருந்தார். இந்த வேன், நேற்று அதிகாலை 2 மணிக்கு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கொச்சி–சேலம் பைபாஸ் சாலை வலசுபாளையத்தில் உள்ள பாலம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை தர்மேஷ் மற்றும் பிரேமா ஆகியோர் பலியானார்கள். மற்ற அனைவரும் பலத்த காயங்களுடன் வேனுக்குள் உயிருக்கு போராடினார்கள்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்களும், பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முகுந்தன்மாதவன், பாரதிபிரியா, விஜயா, கீதா மற்றும் டிரைவர் அசோக் ஆகிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் குழந்தை தர்மேஷ், பிரேமா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குருவாயூர் கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்தபோது வேன் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி, பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் குழந்தை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story