அரசியலுக்கு வந்தால் கமல்ஹாசனுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
‘நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்’ என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கோவை,
நீட்தேர்வை பொறுத்தவரை தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து வருகிறோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர், டெல்லிக்கு சென்று பிரதமர், மத்திய மந்திரிகளை சந்தித்து நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளனர். முடிந்த அளவுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அ.தி.மு.க. ஒரே அணிதான். பிரிந்துள்ளோமே தவிர, இருவரும் ஒரே கருத்துடன்தான் செயல்படுகிறோம். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியதாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வோம்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது அவர்களது விருப்பம். தேசிய வங்கிகளில் விவசாயிகளின் கடனை ரத்து செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் திரைப்பட நடிகர். அவர் அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.
மெட்ரோ ரெயில் திட்டம் கோவை மாவட்ட மக்களின் நீண்டகால கனவு ஆகும். இந்த மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் விருப்பம் முழுமையாக நிறைவேறும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு கொசு நல்ல தண்ணீரில்தான் பரவுகிறது. இதனால் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். தமிழக சுகாதாரத்துறை டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.