போலீசார் குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் 4 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும்


போலீசார் குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் 4 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும்
x
தினத்தந்தி 23 July 2017 3:45 AM IST (Updated: 23 July 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் குறைதீர்க்கும் முகாம் தமிழகம் முழுவதும் 4 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் என்று டி.ஜி.பி.ராஜேந்திரன் தெரிவித்தார்.

மதுரை,

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார்யாதவ் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த போலீசார், சப்–இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 923 பேர் பங்கேற்று தங்களின் குறைகள் அடங்கிய மனுவை டி.ஜி.பி.ராஜேந்திரனிடம் வழங்கினார்கள்.

இந்த முகாமில் டி.ஜி.பி.ராஜேந்திரன் பேசும் போது கூறியதாவது:–

காவல்துறை என்பது மிகவும் முக்கியமான துறையாகும். இதில் காவலர்களின் கோரிக்கைகளை நன்கு பரிசீலனை செய்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி போலீசாரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன. தற்போது கமி‌ஷனர் மற்றும் எஸ்.பி. மூலமாகவும் காவலர்களின் குறைகள் கேட்கப்பட்டு வருகின்றன.

இங்கு பொதுவான கோரிக்கை இடமாறுதல் வேண்டியதாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு சீனியாரிட்டி அடிப்படையிலேயே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சிலரது கோரிக்கை தண்டனை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதாக இருக்கும். அவர்கள் அதில் மேல் முறையீடும் செய்திருப்பார்கள். அவ்வாறு எத்தனை பேர் உள்ளனர் என்பதை ஆராய்ந்து சில கோரிக்கைகள் கமி‌ஷனர் மற்றும் சரக டி.ஐ.ஜி. அளவில் தீர்த்து வைக்கப்படும். தீர்க்க முடியாத கோரிக்கைகளை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாமில் கொடுக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் குறிப்பிட்ட காலத்திற்கும் தீர்த்து நடவடிக்கை எடுத்ததாக அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும். அடுத்து வரும் 4 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல போலீஸ் அலுவலங்களில் குறைதீர்க்கும் முகாம் நடத்தி போலீசாரின் குறைகள் தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் குறைதீர்க்கும் முகாமிற்கு வந்தவர்கள் அனைவரும் தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்திற்கு மாவட்ட வாரியாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்களிடம் டி.ஜி.பி.ராஜேந்திரன் நேரில் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார்அகர்வால், டி.ஐ.ஜி. பிரதீப்குமார். மதுரை புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மதுரை கரிமேடு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பாண்டியன் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனு குறித்து கூறும் போது, எனக்கு ஒரு மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். மகள் என்ஜினீயரிங் படித்துள்ளார். இந்த நிலையில் எனக்கு கடந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் வந்தது. அதில் நான் உயிர் பிழைத்து தற்போது இங்கு வந்துள்ளேன். ஆனால் என்னால் வேலை செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே என் வேலையை என் மகளுக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளேன். என் மகள் கடந்த சப்–இன்ஸ்பெக்டர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் உடற்தகுதி தேர்வு செல்ல முடியவில்லை. எனது மனுவை பெற்றுக் கொண்ட டி.ஜி.பி. உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றார்.

இந்த நிலையில் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர் நேற்று மைக்கில் போலீசாருக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இது குறித்து போலீசார் கூறும் போது, குறைதீர்க்கும் முகாம் மூலம் கிடைத்த பரிசாக இதனை நினைக்கிறோம் என்றனர்.


Next Story