பெங்களூருவில் ஆகஸ்டு 15–ந் தேதி 125 வார்டுகளில் இந்திரா மலிவு விலை உணவகம் திறக்கப்படும் முதல்–மந்திரி சித்தராமையா அறிவிப்பு


பெங்களூருவில் ஆகஸ்டு 15–ந் தேதி 125 வார்டுகளில் இந்திரா மலிவு விலை உணவகம் திறக்கப்படும் முதல்–மந்திரி சித்தராமையா அறிவிப்பு
x
தினத்தந்தி 22 July 2017 10:00 PM GMT (Updated: 2017-07-23T01:20:25+05:30)

பெங்களூருவில் ஆகஸ்டு 15–ந் தேதி 125 வார்டுகளில் ‘இந்திரா மலிவு விலை’ உணவகம் திறக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் ஆகஸ்டு 15–ந் தேதி 125 வார்டுகளில் ‘இந்திரா மலிவு விலை’ உணவகம் திறக்கப்படும் என்று சித்தராமையா கூறினார்.

திறப்பு விழா

பெங்களூரு ராஜாஜிநகர் மாகடி ரோட்டில் கே.எச்.பி. காலனி சந்திப்பு அருகே ரூ.25 கோடி செலவில் சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு புதிய பாலத்தை திறந்து வைத்து பேசியதாவது:–

‘‘வளர்ச்சி பணிகள் எவ்வளவு நடைபெற்று வந்தாலும், எதுவும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. காமாலை கண்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றன. வளர்ச்சி பணிகளுக்கு தடை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சிகள் வழக்கமாக கொண்டுள்ளன. நாங்கள் பெங்களூருவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.

பொய் சொல்ல ஒரு வரம்பு

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதால், வளர்ச்சி பணிகள் தான் பாதிக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்த வகையிலும் பயன் கிடைக்காது. பொய்களை சொல்ல ஒரு வரம்பு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் வரம்பு மீறி குற்றங்களை சுமத்துகின்றன. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. இது தந்திரம் என்று எதிர்க்கட்சிகள் குறை கூறின.

பெங்களூருவில் ஏழை மக்களின் பசியை போக்க மலிவு விலை இந்திரா உணவகத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதையும் எதிர்க்கட்சி தலைவர்கள் குறை கூறுகிறார்கள். சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதையும் தந்திரம் என்று அவர்கள் சொல்கிறார்கள். நாங்கள் செய்துள்ள பணிகள் குறித்து மக்களே நல்ல முடிவை வழங்குவார்கள்.

125 வார்டுகளில் இந்திரா உணவகம்

இந்திரா உணவகம் தொடர்பாக கூறியுள்ள குற்றச்சாட்டு அவதூறு வழக்கு தொடர பொருத்தமானது. நான் ஒரு வழக்கறிஞராக இதை சரி தான் என்பேன். ஆனால் எங்கள் மீது குற்றம்சாட்டியவர்கள் மீது நாங்கள் வழக்கு போட மாட்டோம். அனைத்து வார்டுகளிலும் இந்திரா உணவகம் தொடங்கப்படும். ஆகஸ்டு 15–ந் தேதி 125 வார்டுகளில் இந்த மலிவு விலை உணவகம் தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து மீதமுள்ள வார்டுகளில் அக்டோபர் 2–ந் தேதி இந்த உணவகம் திறக்கப்படும்.

பெங்களூரு உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 240 சதுர கிலோ மீட்டராக இருந்த பெங்களூரு நகரம் தற்போது 840 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது. நகரில் 1.10 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 67 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 47 லட்சம் இரண்டு சக்கர வாகனங்கள் இருக்கின்றன. இதனால் வாகன நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது.

போலீசார் சம்பவ இடத்திற்கு...

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதை நாங்கள் செய்து வருகிறோம். இதற்காக ‘பிங்க்‘ ரோந்து வாகனங்களை தொடங்கியுள்ளோம். இந்த வகையான வாகனங்கள் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கப்படும். ‘‘நம்ம 100’’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த எண்ணில் புகார் தெரிவித்த அடுத்த 15 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

விழாவில் மேயர் பத்மாவதி, வீட்டு வசதித்துறை மந்திரி கிருஷ்ணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story