முதல்–மந்திரியின் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது மத்திய மந்திரி சதானந்தகவுடா பேச்சு
முதல்–மந்திரியின் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
பெங்களூரு,
முதல்–மந்திரியின் நிவாரண நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
மருத்துவ சிகிச்சை செலவுக்காக...பொது காப்பீட்டு திட்ட முகவர்கள் கூட்டமைப்பு சார்பில் சுகாதார காப்பீடு குறித்த கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கத்துறை மந்திரி சதானந்தகவுடா கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
முதல்–மந்திரியின் நிவாரண நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சை செலவுக்காக ஏழை மக்கள் பலர் உதவி கேட்டு மனு கொடுக்கிறார்கள். இதில் சிலர் மருத்துவ சிகிச்சை பெற்றதாக போலி ஆவணங்களை தயாரித்து கொடுக்கிறார்கள். இதனால் முதல்–மந்திரியின் நிவாரண நிதி தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் இடைத்தரகர்கள் மூலமும் இவ்வாறு மோசடி செய்யப்படுகின்றன. இது தடுக்கப்பட வேண்டும். தகுதியானவர்களுக்கு இந்த உதவி கிடைக்க வேண்டும்.
காப்பீட்டு முகவர்களாக...நாட்டில் 24 காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 4 நிறுவனங்கள் மட்டும் அரசுக்கு சொந்தமானது. 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த துறையில் பணியாற்றுகிறார்கள். கர்நாடகத்தில் 30 ஆயிரம் பேர் காப்பீட்டு முகவர்களாக செயலாற்றி வருகிறார்கள். இந்த காப்பீட்டு திட்டங்கள் மூலம் நாட்டில் ஆண்டுக்கு ரூ.96 ஆயிரம் கோடி வர்த்தகம் ஆகிறது.
இவ்வாறு சதானந்தகவுடா பேசினார்.