ஜனநாயக நாட்டில் மக்கள் தான் கடவுள் முதல்–மந்திரி சித்தராமையா பேச்சு
ஜனநாயக நாட்டில் மக்கள் தான் கடவுள் என்று முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
ஹாசன்,
ஜனநாயக நாட்டில் மக்கள் தான் கடவுள் என்று முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
அடிக்கல் நாட்டுவிழாஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணாவில் நேற்று கனக்க சமுதாய பவன் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில், முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு கனக்க சமுதாய பவனின் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சித்தராமையா பேசியதாவது:–
மக்கள் தான் கடவுள்சென்னராயப்பட்டணாவில் கனக்க சமுதாய பவன் கட்ட மாநில அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. இந்த கட்டிட பணிக்கான மேலும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக இதுபோன்ற சமுதாய பவன் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் திட்டங்கள், சலுகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். ஜனநாயக நாட்டில் மக்கள் தான் கடவுள். புத்தர், பசவண்ணர், அம்பேத்கரின் கருத்துக்களை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்.
எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் வரை விவசாயிகள் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்ஆனால், மத்திய அரசு விவசாயிகளின் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. மாநில காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கான புதிய, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கான அரசு என்று கூறிவரும் மத்திய அரசு, மத்திய கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன்?. அனைத்து மக்களுக்கும் சமமான சலுகைகள் கிடைத்தால் தான் நாடு வளர்ச்சி அடையும்.
கர்நாடக மக்கள் யாரும் பட்டினியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக மாநில அரசு ‘அன்னபாக்ய‘ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாநிலத்தில் சாப்பாட்டுக்காக யாரும், யாரிடமும் கையேந்தும் நிலை மாறியுள்ளது. ஆதிதிராவிட மக்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களின் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு (2018) நடக்கும் சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், கால்நடை துறை மந்திரியுமான ஏ.மஞ்சு, எச்.டி.ரேவண்ணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.