குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பொதுமக்கள் போராட்டம்


குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 July 2017 3:15 AM IST (Updated: 23 July 2017 11:41 PM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடையை உடைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிஞ்சிப்பாடி,

தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதன் காரணமாக ஏராளமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று இடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்திலும் ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தம்பிப்பேட்டையில் இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. இதற்கு பதில் பெத்தநாயக்கன்குப்பம் அருகே உள்ள தையல்குணாம் பட்டினம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிய கடை சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் திறக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று பெத்தநாயக்கன்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென ஒன்று திரண்டு தையல்குணாம்பட்டினம் வந்தனர். பின்னர் அவர்கள் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை மீது கற்களை வீசியும், தடியால் கடையின் பக்கவாட்டு சுவரை உடைத்தும் சேதப்படுத்தினர். மேலும் கடையின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த சிமெண்ட் சீட்டையும் உடைத்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெத்தாங்குப்பம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் உடைத்த டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் எதுவம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.


Next Story