மின்மோட்டார் பறிமுதல் செய்ததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


மின்மோட்டார் பறிமுதல் செய்ததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 July 2017 10:15 PM GMT (Updated: 26 July 2017 8:44 PM GMT)

திண்டுக்கல் வேடப்பட்டியில், ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டாரை பறிமுதல் செய்ததை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி முடங்கி உள்ளது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. மேலும், குடிநீர் மூலம் நோய் பரவாமல் தடுக்க குளோரினேசன் செய்து வினியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுகிறதா?, தனியார் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படும் குடிநீர் குளோரினேசன் செய்யப்படுகிறதா? என்று மாநகராட்சி கமி‌ஷனர் மனோகர் தலைமையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாரதிபுரம் பகுதியில் அனுமதியின்றி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 3 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து 34–வது வார்டுக்கு உட்பட்ட வேடபட்டியில் நடத்தப்பட்ட சோதனையில், தனியார் ஒருவர் வீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து அனுமதியின்றி குடிநீர் வினியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய மின்மோட்டாரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, மின்மோட்டாரை பறிமுதல் செய்ததை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர துணை தலைவர் தங்கவேலு தலைமையில் சிலர் ஒத்தக்கண் பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலறிந்து வந்த நகர் தெற்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் தனியார் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீர் வழங்கி வந்தார். ஆனால் அந்த ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டாரை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே பறிமுதல் செய்யப்பட்ட மோட்டாரை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் முறையிடுமாறு போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அங்கு சென்ற பொதுமக்கள் சுமார் 200 பேர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மின்மோட்டாரை ஒப்படைப்பதாகவும், அனுமதி பெற்று குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story