மணல் குவாரியை டிராக்டர் உரிமையாளர்கள் முற்றுகை
வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் மணல் குவாரி உள்ளது.
வாலாஜா,
வாலாஜாவை அடுத்த சாத்தம்பாக்கம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் மணல் குவாரி உள்ளது. மணல் குவாரிக்கு சாத்தம்பாக்கம் மற்றும் சக்கரமல்லூர் பாலாற்றில் இருந்து டிராக்டர்கள் மூலம் மணல் எடுத்து வரப்பட்டு பாலாறு அணைக்கட்டு பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது. பின்னர் அரசு விதிமுறைகள்படி விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குவாரிக்கு மணல் எடுத்து வரும் டிராக்டர் உரிமையாளர்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் பணம் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தாங்கள் செய்த பணிக்கு பலமுறை பணம் கேட்டதாகவும் இதுவரை பணம் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.