புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க அமைச்சரிடம், பொதுமக்கள் மனு
ஆரணி 17–வது வார்டு பகுதியில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க அமைச்சரிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆரணி,
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், உடனடியாக தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோபால் தெருவுக்கு நிலத்தடி நீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்துத் தருவதாக உறுதி அளித்தார்.
அப்போது அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:–
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் 60 சதவீதம் தண்ணீர் பிரச்சினைக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. அதற்காக புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளது. ஆரணி ஒன்றியத்தில் 56 இடங்களிலும், மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 55 இடங்களிலும், ஆரணி நகராட்சியில் கோபால் தெரு உள்பட 25 இடங்களிலும், ஆரணி தொகுதி செய்யாறு தாலுகாவில் 17 இடங்களிலும் புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து, சிறுமின்விசை தொட்டிகள் வைத்து, அதன் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இரும்பேடு ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆர்.ஓ. திட்டம், கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் பயணியர் நிழற்கூடம் அமைக்க ரூ.35 லட்சம் மதிப்பிலும், ஆரணி சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டப்பணிகள் மேற்கொள்வது உள்பட மொத்தம் ரூ.2 கோடியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.