எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 30–வது நாளாக தொடர் முழக்க போராட்டம்
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி 30–வது நாளாக தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி தன்னார்வ மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தஞ்சையில் கடந்த 1–ந்தேதி முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. 20 நாட்கள் தொடர்ந்து தஞ்சையிலும், 21–ந்தேதி திருச்சியிலும், 22–ந்தேதி புதுக்கோட்டையிலும், 23–ந்தேதி பெரம்பலூரிலும் தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது.
பின்னர் 24–ந்தேதி முதல் தஞ்சையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 30–வது நாள் இருசக்கர வாகன விற்பனை ஆலோசகர்கள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தலைவர் அறிவழகன் மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணைத்தலைவர் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், லஞ்சம் கொடாதோர் இயக்க அமைப்பாளர் ஆதி.நெடுஞ்செழியன், மாவட்ட தலைவர் வக்கீல் அன்பரசன், மக்கள் நலப்பேரவை தலைவர் தங்கராசன், செயலாளர் பாலகிருஷ்ணன், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணை செயலாளர் ராமசந்திரசேகரன், கவிஞர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) 1–ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.