கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் மனு அளிக்க விவசாயி வந்ததால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் மனு அளிக்க விவசாயி வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 31 July 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் பாட்டிலுடன் விவசாயி மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் கோரிக்கை மனு அளிக்க முயன்றார். அவர், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலையும் கொண்டு வந்திருந்ததால் போலீசார் விரைந்து சென்று அந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கிவிட்டு, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றினர்.

இது குறித்து தமிழ்ச்செல்வன் கூறியதாவது:–

எனது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். அதன்படி கடந்த 27–ந் தேதி எனது வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக வழித்தடம் அமைக்க மின் ஊழியர்கள் வந்தனர். அவர்களை சிலர் வழிமறித்து எந்த பணியும் செய்யக்கூடாது என்று தடுத்து விட்டனர். இது தொடர்பாக பாப்பாநாடு இளநிலை பொறியாளர், பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். என் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுக்கக்கூடாது என்று தடுத்தவர்கள் மீது நான் ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறேன்.

எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எனது குடும்பத்தினர் எல்லோரும் எனது வீட்டிற்கு மின் இணைப்பு இல்லாததால் இருட்டில் வாழ்ந்து வருகிறோம். மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக பெட்ரோல் பாட்டிலுடன் வந்தேன். மின் இணைப்பு கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்வதை தவிர வேறுவழியில்லை என்று தெரிவிப்பதற்காகவே பெட்ரோல் பாட்டிலுடன் வந்தேன். ஆனால் பெட்ரோல் பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சையை அடுத்த பூதலூர் தாலுகா ஆவாரம்பட்டி நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 25–க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேலிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், ஆவாரம்பட்டி நிலக்குடியேற்ற கூட்டுறவு சங்கம் 1952–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24–ந் தேதி செயல்பட தொடங்கியது. பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்–அமைச்சராக இருந்தபோது 115 உறுப்பினர்களுக்கு 337 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கடந்த 66 ஆண்டுகளாக தொடர்ந்து சாகுபடி செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரியை செலுத்தி வருகிறோம். 68 உறுப்பினர்களுக்கு 2007–ம் ஆண்டு தஞ்சை தாசில்தாரால் இலவச பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்ட 337 ஏக்கரில் 109 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுபோக மீதமுள்ள 228 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த நிலங்களை கொண்டு தான் 300 குடும்பங்கள் ஜீவனம் செய்து வாழ்ந்து வருகிறோம். இந்த நிலங்களை தவிர வேறு நிலங்கள் எங்களுக்கு கிடையாது. எனவே எங்களது நிலங்களை பார்வையிட்டு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் எங்கள் அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை பள்ளிக்கூட சாலையை சேர்ந்த விவசாயி வீரசேனன் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொன்னவராயன்கோட்டை உக்கடை கிராமத்தில் 3 ஏக்கர் 30 செண்ட் நிலத்தில் சம்பா சாகுபடி செய்ய அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016–ம் ஆண்டு ரூ.78 ஆயிரத்து 870 பயிர்க்கடன் வாங்கியுள்ளேன். நான் கடன் வாங்கிய காரணத்தால் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் 2–ந் தேதி பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து ரூ.1,539–யை எனது பங்கு தொகையாக செலுத்தி சங்கத்தில் ரசீது பெற்றுள்ளேன். போதிய தண்ணீர் இல்லாததால் நான் சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் பண இழப்பிற்கு ஆளானதுடன், நான் சங்கத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்.

பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்துள்ள எனக்கு நஷ்டஈடு பெற்று தர சங்க செயலாளரை அணுகியபோது பயிர் காப்பீட்டு நிறுவனத்தில் பணத்தை செலுத்தாதது தெரியவந்தது. என்னை ஏமாற்றிய சங்க நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். நீங்கள்(கலெக்டர்) எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story