எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை
விருதுநகரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 23–ந் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:– எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டு மதுரையில் ஜூன் மாதம் 30–ந் தேதி முதல்–அமைச்சரால் தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம்23–ந் தேதி சிவகாசியில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் முதல்–அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார். விழாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகளில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப்போட்டிகளான தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, கோ–கோ, நீச்சல் ஆகிய போட்டிகளையும், நடத்தி முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்களுக்கும், மாரத்தான் போட்டிகளில் முதல், இரண்டு மற்றும் மூன்றாமிடம் பெற்றவர்களுக்கும் பரிசுகளும், மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக மகளிர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாகன அணிவகுப்பு, மருத்துவ முகாம், ரத்ததான முகாம் ஆகியன நடைபெறவுள்ளது. மேலும் அலங்கார ஊர்திகள் பல்வேறு துறைகள் மூலம் ஏற்பாடு செய்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., நமது மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று முதன்முதலாக தமிழக முதல்–அமைச்சராக பதவியேற்றார். எனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை பிற மாவட்டங்கள் வியக்கும் வண்ணம் சிறப்பான முறையில் நடத்திட அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் விருதுநகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சுப்பிரமணியன், சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.