கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதை: மத்திய அரசின் திட்டமிட்ட சதி சீமான் குற்றச்சாட்டு


கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதை: மத்திய அரசின் திட்டமிட்ட சதி சீமான் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 31 July 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பகவத்கீதையை வைத்தது மத்திய அரசின் சதி என்று சீமான் கூறினார்.

கமுதி,

கமுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–

பா.ஜனதா அரசு ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டபத்தில் அமைத்த அப்துல்கலாம் சிலை, வீணை வாசிக்கும் வித்துவான் போன்றும், காவி வண்ணத்திலும் அமைந்துள்ளது. அவர் அனைத்து மதங்களுக்கும் சொந்தமானவர். அப்துல்கலாம் தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் திருக்குறளையும், தமிழ் இலக்கியங்களையும் உயர்வாக பேசி வந்தார். அதனால் உலக பொது மறையான திருக்குறள் புத்தகத்தை அவரது சிலை அருகே வைத்திருக்க வேண்டும். பகவத்கீதையை வைத்துள்ளதால் தேவையற்ற சர்ச்சையும், விவாதங்களும் எழுந்துள்ளன. இது மத்திய அரசின் திட்டமிட்ட சதி. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கமுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:–

தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற பார்க்கிறது. அதற்கு அ.தி.மு.க.வை பகடைக் காயாக வைத்துள்ளது. நீட் தேர்வை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என ஜெயலலிதா கூறியதோடு கடும் எதிர்ப்பும் தெரிவித்தார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவ, மாணவி களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறிவிடும்.

மாநில அரசு, மத்திய அரசுக்கு சலாம் போடுகிறது. மாநில அரசுகளுக்கு எவ்வித சலுகையும் வழங்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தமிழகத்தில் குடிப்பழக்கத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இங்கு இயற்கை வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப் படுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


Next Story