திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 31 July 2017 11:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஆதிதிராவிடர் காலணியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு சின்டெக்ஸ் தொட்டியின் மூலமும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 மாதமாக இந்த பகுதியில் சரிவர குடிதண்ணீர் வழங்கவில்லை என்று கூறி குடிநீர் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் வினியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் அப்பகுதியில் உள்ள கால்வாய் வழியாக பதிக்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாய் தற்போது சாக்கடை கால்வாயாக மாறி உள்ளதால் சாக்கடை நீர் குடிநீர் குழாயில் கலந்து வருகிறது என்று புகார் தெரிவித்தனர்.

மேலும் இந்த பகுதியில் ஏற்கனவே ஆள்துளை கிணறு மூலம் அமைக்கப்பட்ட தொட்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் அந்த தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாத நிலை இருந்து வருகிறது. இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ரவிச்சந்திரனிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கத்துரை, திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சரிசெய்து, அங்கு அமைக்கப்பட்ட தொட்டியை சீரமைத்து அதன் மூலம் குடிதண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுப்பதாக கூறினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.


Next Story