கூடுதல் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் 137 பேர் கைது
பொதட்டூர்பேட்டையில் இருந்து திருத்தணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 137 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிப்பட்டு,
பள்ளிப்பட்டை அடுத்த பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு தினமும் அதிகாலை 3.50 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதில் சென்னைக்கு செல்லும் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர்.
இந்த பஸ்சை விட்டால் அடுத்த பஸ் காலை 4.30 மணிக்கே செல்கிறது. இதனால் 3.50 மணிக்கு செல்லும் பஸ்சில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் இந்த பஸ்சை அதிகாலை 3.30 மணிக்கு எடுக்க வேண்டும். திருத்
தணிக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் அதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்துக்கு வந்த கல்லூரி மாணவர்கள், திருத்தணிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரியும், முதலில் புறப்படும் பஸ்சை அதிகாலை 3.30 மணிக்கு இயக்க வலியுறுத்தியும் திடீரென திருத்தணி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
வேலைக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்ற பொதுமக்களும், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சாலை மறியலில் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.
137 பேர் கைது
அதிகாலையில் தொடங்கிய மறியல் போராட்டம் காலை 10 மணி வரை நீடித்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 137 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அரசு பஸ்சில் ஏற்றினர்.
பின்னர் கைதானவர்களில் 112 பேரை பள்ளிப்பட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திலும், 25 பேரை ஆர்.கே.பேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை கண்டித்து நேற்று பொதட்டூர்பேட்டையில் கடை அடைப்பு நடைபெற்றது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story