சொத்துக்காக தாயை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
சொத்துக்காக தாயை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 67). இவருடைய மனைவி கண்ணம்மாள் (58). இவர்களுக்கு சுசீலா (40), சாவித்திரி ஆகிய மகள்களும், குழந்தைவேல் (37) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிச்சாமியின் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை கண்ணம்மாள் அவருடைய மகன் குழந்தைவேலின் பெயருக்கு மாற்றிக்கொடுத்தார். இது மூத்த மகள் சுசீலாவுக்கு பிடிக்கவில்லை. அவர் தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு தாய் கண்ணம்மாளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார்.
இந்தநிலையில் கடந்த 29–8–2016 அன்று தோட்டத்தில் தனியாக இருந்த கண்ணம்மாளிடம் சுசீலா மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுசீலா, கண்ணம்மாளின் மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளி, துணியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் அவருடைய கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலி மற்றும் 1½ பவுன் தோடு, வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, சுசீலாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
மகளிர் கோர்ட்டு நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், பெற்ற தாயை கொலை செய்த குற்றத்துக்காக சுசீலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அதேபோல் நகைகளை கொள்ளையடித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகளும், தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 3 மாதமும் சிறை தண்டனை விதித்தார்.
மேலும் ரூ.20 ஆயிரத்து 500 அபராதமாக செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறிய நீதிபதி என்.திருநாவுக்கரசு இந்த 3 தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.