ஓ.பன்னீர்செல்வம் கிணறு வழக்கு: மாவட்ட கலெக்டரின் அறிக்கை தயார் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று தாக்கல்


ஓ.பன்னீர்செல்வம் கிணறு வழக்கு: மாவட்ட கலெக்டரின் அறிக்கை தயார் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று தாக்கல்
x
தினத்தந்தி 1 Aug 2017 4:00 AM IST (Updated: 1 Aug 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்து கிணறு தொடர்பான வழக்கில், மாவட்ட கலெக்டரின் ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேனி,

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள், அப்பகுதியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் தோட்டத்தில் கிணறு வெட்டப்பட்டதால் தங்கள் பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தொடர் போராட்டங்கள் நடத்தினர். இந்த கிணற்றை தங்கள் ஊருக்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கிணற்றுடன் அங்குள்ள நிலத்தையும் ஊர் மக்கள் தரப்பில் விலைக்கு வாங்குவது என்றும் முடிவு செய்து அறிவித்தனர்.

இதற்கிடையே லட்சுமிபுரத்தை சேர்ந்த ரெங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் விதியை மீறி கிணறு வெட்டி உள்ளதாகவும், மின் இணைப்பு விதியை மீறி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் பல்வேறு புகார்களை தெரிவித்து இருந்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்ட நிலையில், இந்த கிணறு வெட்டப்பட்டதிலும், மின் இணைப்பு வழங்கியதிலும் விதிமீறல் நடந்து உள்ளதா என்பதை தேனி மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் இந்த கிணறு அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வை தொடர்ந்து அறிக்கையை தயாரித்து உள்ளார். இந்த ஆய்வு அறிக்கை தயார் நிலையில் உள்ளதால், இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே இந்த கிணறு பகுதியை பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்து கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார். மாவட்ட கலெக்டரும் நேரில் சென்று ஆய்வு செய்து விட்டார். ஆய்வு அறிக்கை கலெக்டர் தரப்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்றார்.


Next Story